இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டது. பின்பு ஆசிரியர் தேர்வுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது .இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக இருப்பதால், ஆசிரியர் பணி கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதற்காக வழக்குகளும் தொடுக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதி தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அறிவித்தார்.இதையடுத்து, இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பதில் போட்டி தேர்வு தனியாக நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வையும், நியமனத்துக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.மேலும், டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி , ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
தேசியகல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின் பேரில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில்இந்தத் தேர்வு அமலுக்கு வந்தது.தமிழகபள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த 2017 பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த கல்வியாண்டில், அக்டோபர், 6 மற்றும் அக்டோபர் 7-ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தத் தேர்வை, தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தப்படாது எனவும், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி தான் இனி தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என நடத்த பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சென்னையில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்