'ஆங்கிலக் கல்வி கிராமப்புற மக்களைச் சென்றடைய வேண்டும்'-உச்சநீதிமன்ற நீதிபதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 06, 2018

'ஆங்கிலக் கல்வி கிராமப்புற மக்களைச் சென்றடைய வேண்டும்'-உச்சநீதிமன்ற நீதிபதி


கிராமப் புறங்களில் வாழும் கீழ்த்தட்டு மக்களை ஆங்கிலக் கல்வி சென்றடைய வழிவகை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெ.செலமேஸ்வரர் பேசினார். உடுமலை ஸ்ரீ வெங்கடேசா குழுமங்களின் தலைவரும், தொழில் அதிபருமான டாக்டர் வி. கெங்குசாமி நாயுடுவின் 87ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா ஜிவிஜி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளைத் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி வரவேற்றார்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெ.செலமேஸ்வரர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கெங்குசாமி நாயுடுவின் படத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கி கிராமப் புறத்தில் வாழும் கீழ்த்தட்டு மக்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்தவர் கெங்குசாமி நாயுடு. இன்றைய நாளில் இந்தச் சமுதாயத்துக்கு இம்மாதிரி மனிதர்களே தேவையாக உள்ளனர். குறிப்பாக ஆங்கிலக் கல்வி கிராமப் புறங்களில் வாழும் மக்களைச் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து கெங்குசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு நூலை கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, சென்னை ஆர்எம்டி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் நாயுடு அதைப் பெற்றுக் கொண்டார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், நூல் தொகுப்பாளர் தி.குமாரராஜா, மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கச் செயல் தலைவர் ஆம்பூர் வி.மோகன், துணைத் தலைவர் எம்.சின்ராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு கல்வி நிறுவனங்களின் செயலர் நந்தினி ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த விழாவில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். மேலும், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் சிவகுமார் ஆகியோர் இவ்விழாவுக்குத் தங்களது வாழ்த்துகளை அனுப்பியிருந்தனர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews