பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பழமொழி :
Better go to bed sleepless than rise in debt
கடனில்ல சோறு கால் வயிறு போதும்
பொன்மொழி :
நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை
- எமர்சன்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
நீதிக்கதை
இரண்டு பாறைகள் - Two Rocks
ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.
பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.
அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.
புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.
அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்!’
சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!’
இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?’
‘அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!’
‘என்னால அது முடியாது!’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.
‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’
மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.
‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.
இன்றைய செய்தி துளிகள்:
1.வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி
2.வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
3.கல்லூரி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
4.அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே
5.போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.