எஸ்சி., எஸ்டி உதவித் தொகை: மத்திய அரசுக்கு உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 19, 2018

Comments:0

எஸ்சி., எஸ்டி உதவித் தொகை: மத்திய அரசுக்கு உத்தரவு!


உயர் கல்வி படிக்கும் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ஏன் இதுவரை முழுமையாக வழங்கவில்லை என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உயர் கல்விக்கான உதவித் தொகை பெறும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் எஸ்சி., எஸ்டி மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். இதற்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசிடம் பெற்று தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கி வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வழக்கப்படுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த வகையில், 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை வழங்க வேண்டிய எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 1,765 கோடி ரூபாய் இதுவரை கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளதாக அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசே நிதியை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது மத்திய அரசு தரப்பில் உதவித் தொகைக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களையும் வழங்கினர். மனுதாரர்கள் தரப்பில், ஒரு கல்வி ஆண்டில் உதவித் தொகைக்கான முழுமையான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அந்தந்த கல்வியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டால் தானே மாணவர்கள் உதவித் தொகையால் பயன் பெறுவார்கள். உதவித் தொகை வழங்குவதில் நிலுவை வைத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா” எனக் கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான அமைச்சகத்தையும், சமூக நலத் துறை அமைச்சகத்தையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews