11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 24, 2018

Comments:0

11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு?


புதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என அறிவித்தது, தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் முடிவு என புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்1 பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிளஸ்1 பாடங்களை நடத்தாமல், அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே நடத்தி வந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தன. பிளஸ்1 பாடங்களைப் படிக்காமல், பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு மட்டுமின்றி, அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளிலும் சாதிக்க முடியாமல் போவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்தன. அதனைத் தொடர்ந்தே, பிளஸ்1 தேர்வு தமிழகத்தில் பொதுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது. வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு, அகில இந்திய அளவில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வினை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிளஸ்1 மாணவர்களுக்கு 2018-19 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மன அழுத்தம் பெறுவதாக கூறி, பிளஸ்1 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கிடப்படாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமே நிம்மதி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசின் முடிவு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர் கே.மணிவண்ணன் கூறியது: பிளஸ்1 பாடத்தைத் தொடர்ந்து, பிளஸ்2 பாடங்களை படித்தால் மட்டுமே, ஒரு பாடம் தொடர்பான முழுமையான புரிதல் மாணவர்களுக்கு ஏற்படும். ஆனால், மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் நடைமுறை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவு, தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல், 9ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையினை அரசு பின்பற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பிளஸ்1 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வி படிப்புகளில், கடைசி ஆண்டுப் படிப்பின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால், முதல் 2 அல்லது 3 ஆண்டுகளின் படிப்புகளின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை என்ற நிலை உருவாகும். அதன் மூலம் உயர் கல்வியின் தரம் தாழ்ந்துவிடும். அதுபோலவே, பிளஸ்1 மதிப்பெண் தொடர்பான அரசின் அறிவிப்பும் மாணவர்களின் வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் நெருக்கடிக்குள்ளாவதாக கருதினால், பாடச் சுமையை குறைத்து, தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மாறாக, பிளஸ்1 மதிப்பெண்களை முழுமையாக ஒதுக்க நினைப்பது சரியல்ல. இதனால், பிளஸ்1 பாடங்களில் குறிப்பிட்டவற்றை மட்டும் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். மேலும், தேர்ச்சிக்காக பொதுத் தேர்வில் முறைகேடுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார். தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவும் முடிவு: ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது: கடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 3.4 சதவீத மாணவர்கள் மட்டுமே 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாக பெற முடிந்தது. இதனால் பல பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் விளைவு, மதிப்பெண்களுக்கு பிரபலமான மெட்ரிக் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த தனியார் பள்ளிகளுக்கு, அரசின் தற்போதைய அறிவிப்பு மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்1 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற முடியும். அதற்கு மாறான முடிவினால், தனியார் பள்ளிகள் மட்டுமே வழக்கம்போல் முக்கியத்துவம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. புளூ பிரிண்ட் முறையை ஒழித்ததால், மாணவர்கள் மனனம் செய்யாமல், பாடம் முழுவதிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்குப் பெற்றோர் தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் 11ஆம் வகுப்பு பாடங்களிலிருந்தே நீட் தேர்வுக்கான வினாக்கள் அதிகம் இடம் பெறுகின்றன. தற்போது பிளஸ்1 பாடத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனில், நீட் தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் அர்த்தமில்லை என்றார். - ஆ. நங்கையார் மணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews