மாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 31, 2018

Comments:0

மாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு


மாணவர்களை லட்சாதிபதியாக்கும் வகையில், இன்ஜி., மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபாய் சம்பளத்தில், 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற, வளாக நேர்காணலில், வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. அண்ணா பல்கலை மாணவியர் இருவருக்கு, 39 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில், 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2.5 லட்சம் மாணவ, மாணவியர், பல்வேறு பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர். அவர்களில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற, வளாக நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வளாக நேர்காணல் தேர்வு, நவம்பரில் துவங்கியது. அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மைக்ரோசாப்ட், டி.சி.எஸ்., காக்னிசன்ட், டைட்டன், மகிந்திரா, மிந்த்ரா, ரெனால்ட் நிசான், அடோப் என, பல கார்பரேட் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளித்துள்ளன. பல்கலை மற்றும் தொழிற்துறை கூட்டு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட, வேலைவாய்ப்பு முகாமில், அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில், 'அடோப்' நிறுவனத்தில், வேலைவாய்ப்பு பெற்றவர்களில், அண்ணா பல்கலையின், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் படிக்கும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை சேர்ந்த இரண்டு மாணவியருக்கு, ஆண்டுக்கு, 39.12 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'மிந்த்ரா' நிறுவன வேலைவாய்ப்பில், ஆண்டுக்கு, 27.50 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுதவிர, காக்னிசன்ட், டி.சி.எஸ்., மைக்ரோசாப்ட் நிறுவனங்களும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி, லட்சக்கணக்கில் சம்பளம் நிர்ணயித்துள்ளன. 'இன்போசிஸ்' நிறுவனம் சார்பில், அண்ணா பல்கலையின் சென்னை, மதுரை, கோவை மண்டல கல்லுாரிகளில், வரும், 7ம் தேதி முதல், பிப்., 24 வரை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், மாணவர்களுக்காக, அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவது எப்படி இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்கள் வளாக நேர்காணல் தேர்வில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்காக காக்னிசன்ட், டைட்டன், தேர்ட் வேர், டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன், திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு தயாராகும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் 'சாப்ட் ஸ்கில்' மற்றும் 'பிகேவியர் ஸ்கில்ஸ்' என்ற இன்டர்வியூவுக்கான நடை, உடை, பேச்சு பயிற்சிகளுக்கான வழிகாட்டி விபரமும் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எதற்கு முன்னுரிமை கடந்த ஆண்டுகளில் கணினி அறிவியல், ஐ.டி., துறை சார்ந்த மாணவர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிகல், சிவில், பயோ மெடிக்கல் துறை மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews