Breaking

Saturday, November 07, 2026

அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்



அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்

தமிழகத்தில் 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தன்நிலைக் கற்றல் திட்டத்தை அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: நடப்பு கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘தன்நிலை கற்றல் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியில் சாதிக்க இத்திட்டம் உதவும்.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு தன்நிலைக் கற்றல் திட்டம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறன், வேகம் மற்றும் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, அவரவர் தேவைக்கு ஏற்ப கற்றல் வாய்ப்பு களை வழங்கும் திட்டமாகும். இதில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கணினியைத் தனித்தனியாகப் பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்கமுடியும். மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும்.

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இதற்கான பிரத்யேகப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கல்வி வளர்ச்சிக்கான தன்னார்வ அமைப்பான எஜுகேஷனல் இனிஷியேட்டிவ்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog