1,299 எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள, 1,299 எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 909 ஆண்கள்; 390 பெண்கள் என, 1,299 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஏப்ரலில் வெளியிட்டது.
இதற்காக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். காவல் துறையில், இரண்டு மற்றும் முதல் நிலை காவலர்களாக, தலைமைக் காவலர்களாக பணிபுரிவோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள, 80 சதவீதம் பொது தேர்வர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இருவருக்கும் தனித்தனி தேர்வு மற்றும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு, சீனியாரிட்டி வழங்கப்பட்ட பிறகு, பொதுப்பட்டியலில் இருப்பவர்களுக்கு சீனியாரிட்டி வழங்கப்படுகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்பில், 'தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளது. எனவே, அனைவருக்கும் ஒரே தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து, டி.ஜி.பி., அலுவலகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சில விளக்கங்கள் கோரப்பட்டன.
அதற்கான விளக்கங்கள் வரும் வரை, வரும் 28, 29ம் தேதிகளில் நடக்க இருந்த, எஸ்.ஐ., எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.