பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு
பிஎஸ்என்எல் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித் துறை ரூ.1.5 கோடி நிலுவை வைத்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 3,700 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்(ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் ரூ.1.5 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தொகையை பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூவலைதளப் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில், இணையதள சேவைக்கான கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளததாக தெரிய வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியுள்ளது. சுமார் ரூ.8.5 லட்சம் கோடி வரை கடனில் உள்ளது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும் அன்றாடச் செலவுகளுக்குதான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணையளதள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், தி.மு.க. அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜி.எஸ்.டி.யில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீதம் நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? திவாலாகும் நிலையில் தமிழக அரசு இருக்கிறதா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''தமிழகத்தில் எந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் இணைய இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை ரூ.2,151 கோடியை மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலவையோ, கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு நிதியில் இருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் செலுத்தியுள்ளோம்'' என்றார்.
தொடர்ந்து இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், 'தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கடிதம் வந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்?
கடந்த 3 ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்துவிட்டு பல திட்டங்களை இன்னும் செயல்படுத்தவில்லை. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியை கட்டுவதற்குக் கூட முடியவில்லையா' என்று கூறியுள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، ديسمبر 23، 2024
Comments:0
Home
Anbil Mahesh poiyamozhi
annamalai
பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு
பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.