NCC முகாம் நடத்துவதற்கு, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறப்பட்டதா? - நீதிபதிகள் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2024

Comments:0

NCC முகாம் நடத்துவதற்கு, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறப்பட்டதா? - நீதிபதிகள் கேள்வி



NCC முகாம் நடத்துவதற்கு, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறப்பட்டதா? - நீதிபதிகள் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர். நான்கு பள்ளிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஒரு பள்ளிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு விட்டதாகவும், இரண்டாவது பள்ளிக்கு, அடுத்த வாரத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும், மற்ற இரண்டு பள்ளிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

இதையடுத்து, என்.சி.சி., முகாம் நடத்துவதற்கு, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறப்பட்டதா; பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போலீசார், என்.சி.சி., உயர் அதிகாரியின் ஒப்புதல் பெறாமல், எதற்காக என்.சி.சி., முகாமை பள்ளிகள் நடத்தின என்பது குறித்து விசாரித்தனரா? மற்ற பள்ளிகளுக்கு எதற்காக மாணவியரை அழைத்துச் சென்றனர்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், என்.சி.சி., உயர் அதிகாரியின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்; ஆனால், ஒப்புதல் பெறத் தவறி உள்ளனர் என்றார். இந்த வழக்கில் பல தகவல்களை அரசு தரப்பு மறைப்பதாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, என்.சி.சி., முகாம் தொடர்பான பல விஷயங்களை, போலீசார் ஏன் விசாரிக்கவில்லை? என, நீதிபதிகள் கேட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமனின் அலுவலகத்துக்கு மாணவியரை அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு செய்திருப்பதும், மைசூரு, புதுச்சேரி, மாமல்லபுரத்துக்கு அழைத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை குறித்து, ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க, சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews