பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 28, 2024

Comments:0

பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி



கடும் மன உளைச்சலில் ஆசிரியர்கள்? - அதிகாரிகள் சிந்திப்பார்களா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி

எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக - பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

தொடக்கக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் உடனடி கவனம் செலுத்தி ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.* எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக !

பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதி மொழி என்ன ஆயிற்று ?

ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு

கலைத் திருவிழா

எண்ணும் எழுத்தும் இணையதளப் பயிற்சி

எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி

வாசிப்பு இயக்கம்

இணையதள பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில், மன அழுத்தத்தில் பணியாற்ற வைப்பது ஏன்?

அதிகாரிகள் சிந்திப்பார்களா?

அமைச்சர் தன் கவனத்தில் கொண்டு குறைகளை நீக்குவது எப்போது?

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை எண்ணும் எழுத்தும் எனும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

இத்திட்டத்திற்கு ஒவ்வொரு பருவத்திற்கும், பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது டிடோஜாக் அமைப்பின் கோரிக்கையின் ஒன்றான பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

இனிவரும் காலங்களில் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் விருப்பமுள்ள ஒரு சில ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும், ஆசிரியர்கள் இனி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவார்கள்.

போதுமான பயிற்சியாளர்கள் இல்லாதநிலை ஏற்படும் போது மட்டும் விருப்பமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தனர்.

அதற்கு முற்றும் மாறாகவும் இனி இணைய வழியில் மட்டுமே பயிற்சிகள் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாகவும் தற்பொழுது கல்வித்துறை அதிகாரிகள் நேரடி பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது இணையதள பயிற்சியும் இணைந்து அளிக்கிறார்கள்.

நேரடி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக முற்றிலும் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களே நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இணையதள பயிற்சி கொடுத்த பின்பு நேரடி பயிற்சியை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.

பருவ விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் இம் ( அக்டோபர்) மாதம் ஏழாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றோடு (24-10-24) ஏறக்குறைய 12 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நடைபெற்றுள்ள நிலையில் இந்த 12 நாட்களுக்குள் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கல்விப் பணி அல்லாத பணியை செய்யக்கூடிய சூழ்நிலையை கல்வித்துறை உருவாக்கி உள்ளது.

இலவச பாடபுத்தகங்கள். இலவச நோட்டுகள், விலையில்லா புத்தகப் பைகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் இவற்றையெல்லாம் தினந்தோறும் பெற்று வந்து ஆசிரியர் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கி வந்தனர்.

அது மட்டுமல்ல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த பருவத்தில் நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளின் தொடர்ச்சியாக இந்த வாரம் குறுவளமைய அளவிலும் வட்டார அளவிலும் பின்பு மாவட்ட அளவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இந்த 13 நாட்களில் பல நாட்களை கலைத்திருவிழாக்கள் கலந்துகொள்வதிலும், அதற்கான “பயிற்சியிலும் கற்றல் கற்பித்தல் நாட்கள் காவு கொண்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.

“இதே நாட்களில் தான் எண்ணும் எழுத்தும் இணையதள பயிற்சி 3 நாட்கள், வாசிப்பு இயக்க இணையதள பயிற்சி 2 நாட்கள் என குறிப்பிட்ட கால அளவுக்குள் பயிற்சிகள் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் எந்நேரமும் அவர்களின் செல்போன் மூலம் இணையதளத்தில் இருக்கக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.

தற்பொழுது இந்த வாரத்திலேயே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி மட்டுமல்லாமல்...

25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும்...

அதற்கான ஆயத்த பணிகளை, தொடர்ந்து இரண்டு நாட்களாக செய்ய வேண்டும் என்றும் தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. இதனால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

பற்றாக்குறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25ஆம் தேதி சாரணர் இயக்க பயிற்சியும் அதுமட்டுமல்லாது வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை

கல்வி அலுவலர் மட்டும் "தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம்" பாடல் பாடும் போட்டி 1 முதல் 12 ஆம் வகுப்புக்குவரை எந்த வித பிரிவு நிலையும் அல்லாது,

பள்ளி அளவில் குறுவளமைய அளவில், வட்டார அளவில் மாவட்ட அளவில்

என இம்மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என அழுத்தம் தரப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்பது உண்மையே.

தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற பிற பணிகள் மற்றும் பயிற்சிகளாலும் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய முடியாமல், அரசுப் பள்ளியை நம்பி வந்த ஏழை எளிய மாணவர்களுக்கும் போதிய கற்றல் கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத நிலையினால், பெற்றோர்களிடமும் சமுதாயத்திலும் அரசு ஆசிரியர்கள் பெரும் அவப்பெயரை பெறும்வகையில் அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையாகவும் கண்டிக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் தகர்ப்பதாகவும் உள்ளது.

எனவே உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பள்ளிக் கல்வித்துறையின் மீது உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் மட்டும் வழங்கிடவும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை ரத்துசெய்து, டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி பயிற்சிகளுக்கு இனிவரும் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்தாத நிலையினை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறோம்.

ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர்,

செ.முத்துசாமி Ex MLC

பொதுசெயலாளர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews