நீட் முறைகேடு: மாணவர்கள் நலனுக்காக விரைவில் முடிவு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து உரிய முடிவை எடுக்கும் என்றும் அது மாணவர்களின் நலனுக்காக இருக்கும் எனவும் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிறகு எப்போதும் விவாதம் நடைபெறும். நீட் விவகாரத்தில் அரசு மறைக்க எதுவும் இல்லை. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து தொடர்புடைய நபர்களிடம் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி அரசு விரைவில் முடிவெடுக்கும்" எனக் குறிப்பிட்டார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அந்தந்த மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் கடந்த 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதே மாநிலத்தில் மேலும் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.