தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 22, 2023

Comments:0

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?



தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? Who will be the next Chief Secretary of Tamil Nadu?

தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் இறையன்பு, இம்மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் அடுத்த சில நாள்களில் வெளியாக உள்ளது. இதனிடையே அந்த பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக, 2021 மே 7 ஆம் தேதி இறையன்பு பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் இம்மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பணி ஓய்வுக்குப் பின்னர், இறையன்புக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பணியில் இருந்து முழு ஓய்வுபெற விரும்புவதாக, அவர் கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலாளர் பணி என்பது ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருக்கும் தலைமை வகிக்கும் பொறுப்பு என்பதால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவாக, இப்பதவி உள்ளது.

தலைமைச் செயலர் பதவிக்கு வர முடியாமல், ஓய்வு பெறுவோர் அதிகம்; ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு கிட்டும். தற்போது, தலைமைச் செயலர் அந்தஸ்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெயரை, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தாலும், தமிழக முதல்வர் யாரை விரும்புகிறாரோ, அவரை தலைமைச் செயலராக நியமிக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். பணிமூப்பு ஒரு கணக்கீடாக இருந்தாலும், அரசுடன் இணக்கமாக செல்பவராக இருக்க வேண்டும். எனவே, பணிமூப்பு அடிப்படையில், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், இளையவராக உள்ளவரையும், தலைமைச் செயலராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

அவ்வாறு இளையவர் ஒருவரை தேர்வு செய்தால், அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான விபரத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாநில அரசு தேர்வு செய்தவர் மீது ஏதேனும் புகார் இருந்தாலும் மத்திய அரசு விளக்கம் கேட்கும்.

ஆனாலும், மாநில அரசு தேர்வு செய்யும் நபரையே, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான நடைமுறையின்படி, மூன்று பேர்களை, தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது. இதில், நகராட்சி நிர்வாகம் துறை செயலராக உள்ள சிவ தாஸ் மீனாவுக்கும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் இடையே, கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தவிர, வேறு சிலரும் இப்போட்டியில் உள்ளதாகவும், அவர்களில் யாரை முதல்வர் தேர்வு செய்ய உள்ளார் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

2024 மே மாதம் ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 2024 அக்டோபரில் சிவ தாஸ் மீனாவும், 2026 ஜனவரியில் எஸ்.கே.பிரபாகர் ஓய்வு பெறுகின்றனர். இதில், அடுத்த புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இரண்டாவதாக எஸ்.கே.பிரபாகருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறையன்பு பணியில் இருந்து முழு ஓய்வுபெற விரும்புவதாக கூறியுள்ளதை அடுத்து, தமிழ்நாடு அரசின் ஆலோசகராக இறையன்புவை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வும் தில்லியில் நடைபெற்று வருகிறது.

தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்ற நிலையில் தற்போது அவரும் பணி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

bv புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (தில்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் உள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என்றும் இந்த 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும்.தற்போதைய நிலவரப்படி முதல் இரண்டு இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைலேந்திரபாபுவுக்கு 30 ஆம் தேதி பிரிவு உபச்சார விழா நடைபெறும். 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை என்பதால். 28 ஆம் தேதி தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபி பெயர் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews