சீருடைப் பணியாளர் நியமனம்: இடஒதுக்கீடு கோர முடியாது - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

சீருடைப் பணியாளர் நியமனம்: இடஒதுக்கீடு கோர முடியாது - தமிழக அரசு

இரண்டாம் நிலை காவலர்கள் காலிப்பணியிடங்களில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி இடங்களில் முன்னாள் துணை ராவணத்தினர் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முப்படைகளிலும் இனி 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. பணிக்கொடை, ஓய்வூதிய பயன்கள் இல்லாமல், வெறும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. இதனையடுத்து, அக்னிபத் திட்டம்' மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன.

தகுதி நிபந்தனைகளை நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு, இந்திய கடலோரக் காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து 16 பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% காலி இடங்கள் ஒதுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்தது.

அதேபோன்று, மத்திய ஆயுதக் காவல்படை (துணை ராணுவப்படை), அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய ஆயுதக் காவல்படை பிரிவில் ஏற்கனவே முன்னாள் ராணுவப் படை பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருவதால், இந்த புதிய அறிவிப்பு அதற்கு மேல் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்னிவீரர்களுக்கு மாநில காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், அசாம் போன்றவை அறிவித்தன.

இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வுகளில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, 3552 காலி இடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த மொத்த காலிப்பணியிடங்களில், அரசு விதிமுறைகளின் படி முன்னாள் ராணுவத்தினர் 5% சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வுசெய்யப் படுவார்கள் என்றும், அதில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய ஆண்டுகளில், துணை இராணுவத்தினர் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டதாகவும், தற்போதைய முடிவால் நூற்றுக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் துணை ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews