முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

அதிக சிகிச்சை முறைகளுடன், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து செயல்படுத்த, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணை வழங்கினார். முதல்வரின் விரிவான மருத்துவ திட்டமானது, பிரதம மந்திரியின் மக்கள்ஆரோக்கிய திட்டத்துடன் இணைத்து, 2018 செப்டம்பர் 23 முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், இம்மாதம் முடிவடைகிறது. அதை ஐந்து ஆண்டுகளுக்கு, மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில், ஏழை திட்டப் பயனாளிகள், அதிகபட்சம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை, கட்டணமில்லா சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஏழை மக்கள் கூடுதல் பயன் பெறும் வகையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான, குடும்ப ஆண்டு வருமானத்தை, 72 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை எம்.ஆர்.சி.,நகரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, இன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணை வழங்கினார்.

முதல்வர் முன்னிலையில், தமிழக அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்திற்காக 1,248.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், எட்டு உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை 1,600 மருத்துவமனைகளில் பெறலாம்.

தற்போது 86 கூடுதல் சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் வழியாக, 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன், சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பத்திரிகையாளர் காப்பீடு அட்டை!

அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குடும்பங்களை, ஆண்டு வருமான உச்சவரம்பின்றி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயனாளிகளாக இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள், முதல் கட்டமாக பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று பத்திரிகையாளர்களுக்கு, மருத்துவகாப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை முதல்வர் வழங்கினார்.

'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

தமிழகத்தில் மொத்தம், 8.83 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 17 மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வழியே மட்டும், 3.15 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 15 வயது முதல் 18 வயதுள்ளோருக்கு இதுவரை, 21.52 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் உள்ளவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசிசெலுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5.65 லட்சம் சுகாதார பணியாளர்கள்; 9.78 லட்சம் முன்கள பணியாளர்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் உள்ளவர்கள் 20.83 லட்சம் பேர் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 2.06 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள்; 92 ஆயிரத்து 816 முன்களப் பணியாளர்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 1.01 லட்சம் என, மொத்தம் நான்கு லட்சம் பேருக்கு, நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம்; மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews