பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த உடுமலை ஏழை பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 30, 2022

Comments:0

பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த உடுமலை ஏழை பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு

''திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஏழை பெண் இளநீர் வியாபாரி, தனது குழந்தைகள் படிக்கும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு, தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் தேவை'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: ஜன.,30 தேதியானது மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மஹாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு மூலையிலும் உற்சாகம் எழுந்ததை நாம் மறக்க முடியாது.

அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். முன்னார் ராணுவ வீரர்கள் சிலர், அமர்ஜவான் ஜோதி, குறித்து கடிதம் எழுதி உள்ளனர். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று பாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் மன் கி பாத் நிகழ்ச்சியை அஞ்சல் அட்டை மூலம் எனக்கு அனுப்பியுள்ளனர். இந்த அஞ்சல் அட்டைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கூட வந்துள்ளன. இந்த அஞ்சல் அட்டைகள் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நமது எதிர்கால தலைமுறையின் பரந்த மற்றும் விரிவான கண்ணோட்டத்தை எடுத்து காட்டுகிறது. இந்தாண்டு பத்ம விருதுக்கு, அதிகம் வெளியே தெரியாதவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். உடுமலை பெண்

கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தனது மகள் மற்றும் மகனுக்கு கல்வி கிடைக்க செய்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் தாயம்மாள் தவறவிடவில்லை. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது, பள்ளி மற்றும் வகுப்பறையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்பையும் கவனிக்க வேண்டும் என்றனர். அந்த கூட்டத்தில் தாயம்மாளும் கலந்து கொண்டார். அனைத்தையும் கேட்டார். ஆனால், பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணம் குறித்த பிரச்னை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. இதன் பிறகு, தாயம்மாள் செய்த செயலை யாரும் நினைத்து பார்த்திருக்க கூட மாட்டார்கள்.

இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்ய வேண்டும் என்ற மனதும் தேவை. தற்போது பள்ளியில் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுவதாக கூறும் தாயம்மாள், பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டால் 12ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளார். நமது நாட்டில் கல்வி குறித்து பேசிய அதே உணர்வு தான் இதுவும்.

கொரோனாவின் புதிய அலையை எதிர்த்து இந்தியா தைரியமாக போராடி வருகிறது. 4.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது பெருமையளிக்கும் விஷயம். பூஸ்டர் தடுப்பூசிகளும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நமது தடுப்பூசி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே, நமது பலத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது, கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஒரு நேர்மறையான செய்தி. இவ்வாறு பிரதமர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews