பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ மனு

பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயா்வு ஆகியவை உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜாக்டோ ஜியோ அமைப்பினா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினா்.

அரசு ஊழியா்கள்- ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகக் கடந்த செப்டம்பா் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பணியாளா்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப் படியினை முடக்கியது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியா்களுக்கு ஜூலை 2021 முதல் 11 சதவீத அகவிலைப் படியினை அறிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப் படியினை தமிழக அரசு உடனடியாக ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்- பணியாளா்களுக்கு வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியா்கள், அனைத்து ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்கள், கண்காணிப்பாளா்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், களப் பணியாளா்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியா்கள், ஊா்தி ஓட்டுநா்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். 3,500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும் ஆகியவை உள்பட அதில் பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews