பெகாசஸ் (Pegasus) மென்பொருள் என்றால் என்ன? செல்போனை எப்படி ஹேக் செய்கிறது? யார் பயன்படுத்துவார்கள்?- விரிவான பார்வை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

பெகாசஸ் (Pegasus) மென்பொருள் என்றால் என்ன? செல்போனை எப்படி ஹேக் செய்கிறது? யார் பயன்படுத்துவார்கள்?- விரிவான பார்வை

பெகாசஸ் மென்பொருள் என்றால் என்ன? செல்போனை எப்படி ஹேக் செய்கிறது? யார் பயன்படுத்துவார்கள்?- விரிவான பார்வை
what-is-pegasus-software-how-does-it-hack-into-your-phone-to-spy-on-you
மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாளில் வெளியாகி, இந்திய அரசியலை உலுக்கிவரும் வார்த்தை பெகாசஸ். (Pegasus) பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவைச் சேர்ந்த சிட்டிஸன் லேப் எனும் இதழ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உள்பட 45 நாடுகளில் இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக கடந்த 2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை வெளியிட்டது. உண்மையில் பெகாசஸ் என்றால் என்ன, எவ்வாறு இயங்குகிறது, யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எதற்குப் பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு செல்போன்கள் ஹேக் செய்யப்படுகின்றன என்பது குறித்துப் பார்க்கலாம். பெகாசஸ் (Pegasus) என்றால் என்ன?
பெகாசஸ் என்பது ஒருவரின் செல்போனை உளவு பார்க்கும், ரகசியங்களைத் திருடும் ஒரு தீங்கிழைக்கக் கூடிய, மிக நவீனமான மென்பொருள். இந்த மென்பொருள் ஒருவருடைய செல்போனுக்குள் அவருக்குத் தெரியாமல் நுழைந்து, அவரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடிவிடும். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவோர், வெகுதொலைவில் இருந்தே இந்த மென்பொருளை இயக்க முடியும். குறிப்பாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட் செல்போன்களை ஹேக் செய்ய வேண்டும் என்பதற்காகவே பெகாசஸ் வடிவமைக்கப்பட்டது. ஒருவருக்குத் தெரியாமல் ஏதாவது மெசேஜ் வடிவிலோ அல்லது வாட்ஸ் அப் மிஸ்டு கால் மூலமோ அல்லது, ஏதேனும் லிங்க் மூலமோ செல்போனுக்குள் வந்துவிடும். அந்த லிங்க்கை செல்போன் உரிமையாளர் டச் செய்தால் பெகாசஸ் மென்பொருள் இயங்கத் தொடங்கி, செல்போனுக்குள் தன்னைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும். இந்த மென்பொருள் பதிவிறக்கம் ஆனபின், அதை வெகுதொலைவில் இருந்து இயக்குபவர் தனக்குத் தேவையான தகவல்களை செல்போனில் இருந்து திருட முடியும். குறிப்பாக செல்போனின் கேமரா பகுதி, மைக்ரோஃபோன் பகுதியில் இந்த மென்பொருள் தீவிரமாகச் செயல்படும். பெகாசஸ் மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது?

பெகாசஸ் மென்பொருள் அதிநவீனத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. செல்போனுக்கு வரும் தீங்கிழைக்கக்கூடிய இணைப்பைத் தெரியாமல் தொட்டுவிட்டால் அதன் மூலமும், டெக்ஸ்ட் மெசேஜ்கள் மூலமும் பெகாசஸ் மென்பொருள் செல்போனுக்குள் நுழைந்துவிடும். செல்போன் பயன்படுத்துவோருக்குத் தெரியாமல் இந்த மென்பொருள் தன்னைப் பதிவிறக்கம் செய்து, தொலைவில் இருந்து ஹேக்கர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தேவையான பதில்களையும், தகவல்களையும் திருடி இந்த மென்பொருள் வழங்கும். வெகுதொலைவில் இருந்தவாறே ஹேக்கர்கள் பெகாசஸ் மென்பொருளை இயக்க முடியும். தங்களுக்குத் தேவையான தகவல்களை செல்போனில் இருந்து திருட முடியும். குறிப்பாக செல்போனில் இருக்கும் பாஸ்வேர்ட், கான்டாக்ட் லிஸ்ட், காலண்டர், டெக்ஸ்ட் மெசேஜ்கள், வாய்ஸ் மெசேஜ்கள், கால்களை ஒட்டுக் கேட்பது, கேமராவில் இருந்து திருடுவது, என்கிரிப்ட் ஆடியோ மெசேஜ்களையும் திருடக்கூடிய வல்லமை பெகாசஸ் மென்பொருளுக்கு இருக்கிறது. அதிநவீன வசதிகள், தொழில்நுட்பம் கொண்ட மென்பொருள் என்று பெகாசஸைக் கூற முடியும். இந்த மென்பொருளை எந்த நாடு உருவாக்கியது?

பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பப் பிரிவான என்எஸ்ஓ 2010-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கண்டுபிடித்துள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி என்எஸ்ஓ (NSO) என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் என்பது நிவ் கார்மி, ஷாலெவ் ஹூலியோ, ஓம்ரி லாவி ஆகியோரின் பெயரின் முதல் எழுத்தில் என்எஸ்ஓ உருவாக்கப்பட்டது. என்எஸ்ஓ அமைப்பின் நோக்கம் என்பது புதிய நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, சட்டம்- ஒழுங்கு மற்றும் உளவுத்துறைக்கு வழங்கி தொலைவில் இருந்தவாறே எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களின் செல்போனில் இருந்து தகவல்களைத் திருடுவதாகும். இந்த பெகாசஸ் மென்பொருள் இன்று இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய அரசு மறுக்கிறது.

சர்வதேச தகவலின்படி, பெகாசஸ் மென்பொருள் மூலம் ஓராண்டுக்கு 500 பேரின் செல்போன்களைக் கண்காணிக்க முடியும். ஆனால், ஒரே நேரத்தில் 50 பேரின் செல்போன்களைக் கண்காணிக்க முடியும். ஓராண்டு இந்த மென்பொருளைப் பயன்படுத்த லைசன்ஸ் கட்டணமாக 70 முதல் 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும். பெகாசஸை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

என்எஸ்ஓ அமைப்பு இதுவரை தன்னுடைய உளவு மென்பொருளை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த மென்பொருள் பெரும்பாலும், ஒரு நாட்டின் அரசுக்கே அதிகாரபூர்வமாக விற்கப்பட்டுள்ளது. அதாவது, அரசின் விசாரணை முகமைகள், அமைப்புகள் இந்த மென்பொருளை வாங்கியுள்ளன. 2018-ம் ஆண்டு சிட்டிஸன் லேப் அறிக்கையின்படி, இந்தியா, பஹ்ரைன், கஜகஸ்தான், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட45 நாடுகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்துகிறதா?

மத்திய அரசு, பெகாசஸ் மென்பொருளை விலைக்கு வாங்கியதாகவோ, பயன்படுத்துவதாகவோ ஆதாரமான செய்திகள் ஏதும் இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “வாட்ஸ் அப்பில் வரும் கால்கள், மெசேஜ்களை அரசு ஒட்டுக் கேட்பதாக இருந்தால், மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துகிறதா” எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பெகாசஸ் குறித்தோ, வாட்ஸ் அப் ஒட்டுக் கேட்பு குறித்தோ நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews