இன்ஜி., படிப்புக்கு நுழைவு தேர்வு: முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

இன்ஜி., படிப்புக்கு நுழைவு தேர்வு: முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம்

இன்ஜினியரிங் படிப்பின் தரம் குறைந்து விட்டதாலும் பள்ளிகளில் மனப்பாட கல்வி அதிகரித்துள்ளதாலும் நுழைவு தேர்வை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில் 2005ல் 220 இன்ஜி. கல்லுாரிகள் இருந்தன. தற்போது 520க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் இன்ஜினியரிங் பட்டம் பெறுவோரில் 80 சதவீதம் பேர் படைப்பாக்க சிந்தனை கள அறிவு வேலைவாய்ப்பு திறன் வளர்த்தல் போன்றவற்றில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு போன்றவற்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2009ல் சட்டசபை வளாகத்தில் துப்புரவு பணியில் 14 காலியிடங்களுக்கு 4600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதே ஆண்டில் கோவை மாநகராட்சி சுகாதார பணிக்கு 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையை கண்டு அ.தி.மு.க., அரசை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பல அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். மாணவர் சேர்க்கையில் தரம் இல்லாதது கல்லுாரிகளின் தரம் உயராதது கல்லுாரி நிர்வாகங்களின் செயல்பாட்டு பிரச்னை மற்றும் போதிய தர கட்டுப்பாடுகள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணங்கள்.

நுழைவு தேர்வு தான் சரி
இன்ஜினியரிங் படிப்பில் சேர ஒரு மாணவருக்கு போதிய புத்திசாலித்தனமும் படிப்பை பற்றிய நுண்ணறிவும் உள்ளதா என கண்டறிய நுழைவு தேர்வு உதவும். இன்ஜினியரிங் மருத்துவம் போன்ற தொழில் கல்வியில் தரமான மாணவர்களை சேர்க்க நுழைவு தேர்வு முறை தான் சரியான வழி. அதனால் தான் சர்வதேச அளவில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் தொழில் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முறை 1984- - 85ல் அறிமுகமானது. அதன்பின் 2006ல் ரத்து செய்யப்பட்டது. இதனால் சமூக பொருளாதார கல்வி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு எந்த வகையிலும் களையப்படவில்லை. மாறாக வசதியான மாணவர்கள் தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்து அதிக அளவில் தொழில் கல்வியில் சேர்கின்றனர்.

பள்ளி கல்வி சீரமைப்பு
பள்ளி கல்வி முறையை சீரமைத்தல் தேர்வு முறையை சீராக்குதல் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துதல் போன்றவற்றால் தற்போது தரம் குறைந்து வரும் இன்ஜி. கல்வி முறையை மீட்கலாம்.எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இன்ஜினியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சரியான வழி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனப்பாடமே மதிப்பெண்

நுழைவு தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதால் பெரும்பாலான பள்ளிகள் பயிற்சி மையங்கள் போல ஆகிவிட்டன. பிளஸ் 2 பாடங்களை மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர். அதனால் அவர்களால் நீட் ஜே.இ.இ. போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. பிளஸ் 1 பாடங்களை நடத்துவதே இல்லை.

மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் பாடங்களின் அடிப்படைகளை கற்று தருவதில்லை. மாணவர்களின் நுண்ணறிவு சிந்தனை திறன் வளர்ப்பு குறைந்து விட்டது. சிறப்பு பயிற்சி அளிக்கும் பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றில் அதிக கட்டணம் செலுத்துவோர் மட்டுமே சேர முடிகிறது என்றும் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews