ஆன்லைன் விளையாட்டுகளுக்கு - மாணவர்கள் அடிமையாகாமல் தடுக்க அரசால்தான் முடியும் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு - மாணவர்கள் அடிமையாகாமல் தடுக்க அரசால்தான் முடியும் : உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகளால்தான் முடியும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தற்போது ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடக்கின்றன. செல்போன், கணினி, மடிக்கணினி மூலமாக மாணவர்கள்பாடங்களை கற்கின்றனர். இந்தவசதிகளால் பல மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். எனவே ஆன்லைன், ஆஃப்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய, மாநிலஅரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள், இளம் பருவத்தினர் மனதில் வன்மம் விதைக்கப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகள் மாணவர்கள் மனதில் நன்றாகபதிந்து அவர்களின் சிந்தனைத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது.அவர்களை மனதளவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள், இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுவதாக வேதனை தெரிவித்தனர். ‘‘அதிக நேரம் செல்போன் மற்றும் கணினியைப் பயன்படுத்தும் மாணவர்கள் அதிகப்படியான கோப நிலைக்கும், சில நேரங்களில் தற்கொலை முயற்சிக்கும் ஆளாகநேரிடுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருந்து மாணவர்களை காக்கவும், அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகளால்தான் முடியும். பெற்றோர், பெரியோர்களிடம் குழந்தைகள் மனம்விட்டுப் பேசுவதுகுறைந்து வருவது கவலையளிக்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்’’ என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மனுதாரரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews