மாணவிகளுக்கு சீருடை மாற்றமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 08, 2021

Comments:0

மாணவிகளுக்கு சீருடை மாற்றமா?

மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளின் தற்போதைய சீருடையை மாற்றி சுடிதார் வடிவில் கொண்டுவரும் சட்டம் செயல்படுத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு தற்போது ஸ்கர்ட் அண்ட் புளோஸ் சீருடையாக வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில பகுதிகளில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவிகள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகிய கசப்பான சம்பவங்கள் நடந்தது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவிகளை ஈவ் டீசிங் என்ற பெயரில் சிலர் கேலி செய்யும் சம்பவங்களும் நடந்தது. இதை கருத்தில் கொண்ட கல்வி இயக்குனரகம், 2020-21ம் கல்வியாண்டு முதல் மாணவிகளின் சீருடையை மாற்றம் செய்ய முடிவு செய்தது. இதை தன்னிச்சையாக செயல்படுத்துவதை விட, மாணவிகளின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து செயல்படுத்தவும் தீர்மானித்தது. அதன்படி அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைத்து ஆலோசனை கேட்டனர். இதில் பெரும்பான்மையான பெற்றோர் தற்போதுள்ள சீருடையை மாற்றி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளபடி சுடிதார் அல்லது பைஜாமா வடிவிலான சீருடை வழங்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தனர். அதை தொடர்ந்து பலதரப்பில் பெறப்பட்ட தகவல்களை அலசி, ஆராய்ந்தபின், மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு 2020-21ம் கல்வியாண்டு முதல் சுடிதாரை சீருடையாக மாற்றி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கல்வி இயக்குனரகத்தின் சார்பில் மாநில அரசிடம் வழங்கப்பட்டது. அதையேற்று கொண்டு அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி சீருடையாக சுடிதார் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தது. கொரோனா பரவல் காரணமாக 2020-21ம் கல்வியாண்டின் முதல் 6 மாதங்கள் பள்ளிகள் திறக்காமல் இருந்தது. கடந்த ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை கட்டாயமாக்காமல் விருப்பத்திற்கு விட்டதால், சீருடையாக சுடிதார் அணியும் சட்டம் கொண்டு வருவதை செயல்படுத்த முடியவில்லை. வரும் 2021-22ம் கல்வியாண்டு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குவதாக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அப்போது புது சட்டம் அமலுக்கு கொண்டுவர கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்ேறாலை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வருகிறது. ₹85 கோடி செலவாகும் மாநிலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் சுமார் 25 லட்சம் மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சீருடை வழங்க வேண்டுமானால் ₹85 கோடி செலவாகும். இருப்பினும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையில் மாநிலத்தில் கடந்த 50 முதல் 200 ஆண்டுகள் பழமையான பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது அரசு செயல்படுத்தவுள்ள சுடிதார் சீருடையை தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews