துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 பதவிகளுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் 2.57 லட்சம் பேர் எழுதினர். தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங், டாக்டர் என்று பட்ட, பட்டமேற்படிப்பு, தொழில்கல்வி படித்தவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இவர்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,28,401 பேர். பெண்கள் 1,28,825 பேர். மூன்றாம் பாலினத்தவர் 11 பேர்.
இத்தேர்வினை மொத்தமாக 2,56,954 பேர் பதிவு செய்துள்ள நிலையில் 131264 பேர் எழுதியுள்ளனர் எனவும், 1,25,690 பேர் தேர்வினை எழுதவில்லை எனவும், 51.08 சதவீதம் பேர் தேர்வை பதிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. விடைத்தாள் மாற்ற முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். குரூப்-1 தேர்வில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை மாற்ற முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றி 10 கேள்விகளும், பெரியார் பற்றி 10 கேள்விகளும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று காலை நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 856 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 46,965 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 150 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வை கண்காணிக்கும் பணியில் 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேர்வு எழுத வந்தவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகே அவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தான் நடைபெற்றது. ஆனால், தேர்வர்கள் காலை 9.15 மணிக்கு முன்னரே தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன் பிறகு வந்தவர்கள் தேர்வு கூடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போல தேர்வு எழுதியவர்கள் பிற்பகல் 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடங்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. முதல்நிலை தேர்வில் பொது அறிவியலில் 175 வினாக்களும்(டிகிரி தரத்தில் கேட்கப்பட்டிருந்தது), திறனறிவு தேர்வில் 25 வினாக்களும்(எஸ்.எஸ்.எல்.சி.தரத்தில்) என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 1 தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலை கண்காணிக்க 4 நடமாடும் குழுவினர், 1 பறக்கும் படையினர், 15 கண்காணிப்பு அலுவலர் மற்றும் 15 முதன்மைக் கல்வி அலுவலர், 16 வீடியோ கிராபர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக கவசம் அணிந்து தேர்வு எழுத வந்தனர். முழு பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விடைத்தாளில் கைரேகை பதிவு புதிய முறை அமல்
இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதாவது விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. விடைத்தாளில் உரிய இடங்களில்(இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையினை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் E என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் A,B,C,D மற்றும் E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை செய்வதற்காக தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.