மருத்துவக் கல்வியில் போலி அறிவியலைத் திணிக்க முயற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 05, 2020

Comments:0

மருத்துவக் கல்வியில் போலி அறிவியலைத் திணிக்க முயற்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியில் போலி அறிவியலைத் திணிக்க முயல்கிறது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குகிறது. இந்தக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை: ''தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்கல்விக் கொள்கை மூலம், குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவும், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில்களைக் கொண்டுவரவும் மத்திய அரசு முயல்கிறது. இக்கல்விக் கொள்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. மும்மொழித் திட்டத்தை கட்டாயப்படுத்துகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழிவகுக்கிறது. இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றும் நோக்குடன் இக்கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தேசியக் கல்விக் கொள்கை, அறிவியல் மனப்பான்மையை ஊக்கப்படுத்துவதற்கு எதிராகவும், அறிவியல் ரீதியான உலகப் பார்வையை உருவாக்குவதற்கு எதிராகவும் உள்ளது. இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில், போலி மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவக் கோட்பாடுகளைத் திணிப்பதற்கு முயல்கிறது. மருத்துவக் கல்வியிலும், மருத்துவ சிகிச்சைகளிலும் அறிவியலையும் போலி அறிவியலையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மத்திய அரசு இக்கல்விக் கொள்கை மூலம் செய்ய முயல்கிறது. அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல் ( Medical Science) தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய அடிப்படைப் புரிதலின்றி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ''மக்கள் பன்முக மருத்துவ சிகிச்சையை விரும்புகிறார்கள். நமது மருத்துவக் கல்வி முறை ஒருங்கிணைந்ததாக (Our health care education system must be integrative) இருக்க வேண்டும். அலோபதி மருத்துவ மாணவர்கள் ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் அடிப்படை புரிந்துகொள்ளல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதர மருத்துவ முறையினரும் அலோபதி மருத்துவ முறைகளின் அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும்'' என மத்திய அரசு கூறியுள்ளது. இத்தகைய ஒன்றிணைக்கும் போக்கு எதிர்காலத்தில் பல்வேறு மோசமான விளைவுகளை மருத்துவக் கல்வியில் உருவாக்கும். மருத்துவ சேவையின் தரத்தைப் பாதிக்கும். தேவையற்ற குழப்பங்களை மருத்துவ சிகிச்சையில் உருவாக்கும். நவீன அறிவியல் மருத்துவத்தின் மதச்சாற்பற்ற தன்மையைப் பாதிக்கும். ஹோமியோபதி, நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராகத் தோன்றியது. அதற்கு நேர்எதிரான கோட்பாட்டைக் கொண்டது. “ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். அதன் கோட்பாடுகள் அறிவியல் அடிப்படைகளற்றது. மருத்துவ ரீதியாக பயனற்றது’’ எனப் பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஹோமியோபதிக்கு அளித்த ஆதரவைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. எனவே, ஹோமியோபதி போன்ற, மருத்துவ முறையை நவீன அறிவியல் மருத்துவப் படிப்பில் இணைப்பது தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும். ஹோமியோபதி தவிர, இதர ஆயுஷ் மருத்துவ முறைகளின் மருந்துகளில் ஏற்கத்தக்கவற்றை மட்டும், நவீன அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் வளர்த்தெடுக்கலாம். மக்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அறிவியல் ரீதியாக காலாவதியான ஆயுஷ் மருத்துவ முறைகளின் கோட்பாடுகளை, கருத்துகளை, நோயறிதல் முறைகளை, நோய்களின் வகைப்பாடுகளை, சிகிச்சை முறைகளைப் பயன் படுத்துவது அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை முறைகளுக்கு எதிராக அமையும். மருத்துவ சேவை தரத்தை பாதிக்கும். எனவே, ஆயுஷ் மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பது என்பது அறிவார்ந்த செயலன்று. அது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. ஆயுஷ் மருத்துவர்களுக்கு, நவீன அறிவியல் மருத்துவத்தில் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம். அது மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க உதவும். ஆனால், அதேசமயம் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளை நவீன அறிவியல் மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் . இந்தியாவில் அடிப்படை மருத்துவப் படிப்பாக எம்பிபிஎஸ் மட்டுமே இருக்க வேண்டும். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன், ஆயுஷ் படிப்பை முதுநிலை மருத்துவப் படிப்பாக படிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் ஆயுஷ் மருத்துவ முறைகளில் உள்ள மருந்துகளைப் பற்றி ஆராய முடியும். அவற்றில் பயனுள்ளவற்றை, இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு வளர்த்தெடுக்க முடியும். அவற்றில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து, அவற்றை மக்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்த முடியும். அதுவே மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்கு உதவும். அதை விடுத்து நவீன அறிவியல் மருத்துவர்கள், ஆயுஷ் படிக்க வேண்டும் என்பது தேவையற்ற கால விரயம். அவசியமற்ற ஒன்று. மாற்று முறை மருத்துவத்தை நாடுபவர்களுக்கு மாற்று முறை மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதுதான் சரியாக இருக்கும். அதைவிடுத்து, நவீன அறிவியல் மருத்துவக் கல்வியில் மாற்று முறை மருத்துவக் கல்வியை திணிப்பது நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும். மருத்துவத்தில், பன்முகத்தன்மையை விரும்பும் மக்களுக்காக இது செய்யப்படுவதாகக் காரணம் கூறி, நவீன அறிவியல் மருத்துவத்தில், காலாவதியான அறிவியல் கோட்பாடுகளைத் திணிப்பது, மருத்துவ அறிவியல் வளர்ச்சியைப் பாதிக்கும். தரமான நவீன சிகிச்சைகள் இந்திய மக்களுக்குக் கிடைப்பதற்கும் பெரும் தடையாக அமைந்துவிடும். மாற்று முறை மருத்துவத்தை ஊக்கப்படுத்துதல், இந்திய மருத்துவ முறைகள் ஊக்கப்படுத்துதல் என்ற பெயரில் ஆயுர்வேதாவை மட்டுமே மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. 'ஆயுர்வேதாவை ஊக்கப்படுத்துதல்' என்ற போர்வையிலும் கூட மத்திய பாஜக அரசு தொடர்ந்து மூடநம்பிக்கைகளை மருத்துவத் துறையில் புகுத்துகிறது. நவீன அறிவியல் மருத்துவத்தை தனது அரசியல் மற்றும் சித்தாந்த நோக்கங்களுக்காக பலிகடா ஆக்குவது சரியல்ல. இது இந்திய மருத்துவத் துறையை இருண்ட காலத்திற்கு இட்டுச் செல்லும். வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு நமது மருத்துவத் துறை அறிவியல் தொழில்நுட்பரீதியாக முன்னேறி வருகிறது. அதை ஒருங்கிணைந்த மருத்துவ முறை என அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளுடன் இணைத்து பாழ்படுத்துவது சரியல்ல. எனவே இம்முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இந்தக் கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியை மேலும் தனியார் மயமாக்குகிறது. கார்ப்பரேட் மயமாக்குகிறது. சமூக நீதிக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”. இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews