அன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

அன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பரபரப்புக்குப் பெயர் போன சென்னை. நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது அப்பள்ளி. சிசிடிவி கேமராக்கள், பெரிய நுழைவு வாயில், தனித்தனிக் கட்டிடங்கள், பசுமை போர்த்திய வகுப்பறைகள், சுமார் 4 ஆயிரம் மாணவிகள், 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நவீன ஆய்வகங்கள், உயர்தர ஏசி அரங்கம் என ஐந்தரை ஏக்கர் நிலத்தில் ஒரு பல்கலைக்கழகம் போலக் காட்சியளிக்கிறது அந்தப் பள்ளி. 'அவ்ளோ சீக்கிரத்துல அங்க சீட் வாங்க முடியாது' என்ற பெற்றோரின் வார்த்தைகளுடன், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேர், புகழோடு பாரம்பரியத்தையும் தக்க வைத்திருக்கிறது அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் செதுக்கிய கல்விக் கூடத்தைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கிறார் தலைமை ஆசிரியர் அன்பாசிரியர் சரஸ்வதி. எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் உள்ள அவர், தனது ஆசிரியப் பயணத்தைப் பகிர்கிறார்.
''அம்மா, அப்பா ஆசிரியர்கள் என்பதால் நானும் இயல்பாகவே ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் கல்லூரி ஒன்றில் ஆங்கில வழியில் கற்பித்த எனக்கு 1991-ல் அரசுப்பள்ளியில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழில் கற்பிக்க சிரமமாக இருந்தது என்றாலும் பயிற்சிக்குப் பிறகு தமிழில் பழகிக்கொண்டேன். எனினும் தமிழுடன் ஆங்கிலத்திலும் வேதியியல் பாடங்களைக் கற்பிப்பேன். பாடம் குறித்த தெளிவு இருந்ததால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அர்ப்பணிப்புடன் பாடம் நடத்த முடிந்தது. அப்போது மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வு இருந்ததால் அது சார்ந்து சிறப்புப் பயிற்சியை வழங்குவோம். 91-ல் சோளிங்கர் பள்ளியில் வேதியியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக மாறுதல் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோக் நகர் பள்ளிக்கு வந்தேன்.
97-ல் இருந்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சியாளர் ஆனேன். ஆண்டுக்கு இரண்டு முறை 10 நாட்கள் முகாமுக்காகச் செல்வோம். அவற்றில் அளிக்கப்படும் உடற்பயிற்சி, ட்ரில், ஆயுதங்களைக் கையாள்வது, சுடுவது, தற்காப்பு, ஒழுக்கம் ஆகியவை மாணவிகளை தைரியமானவர்களாக மாற்றின. ஒழுக்கத்தைப் போதித்தன. பொதுவாக அரசுப் பள்ளிகளில் என்சிசி பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தயங்குவர். பள்ளி நேரத்துக்குப் பிறகு சொல்லித்தர வேண்டும் என்பதாலேயே அவர்கள் யோசிப்பர். ஆனால் என்சிசியின் முக்கியத்துவம் கருதி, தொடர்ந்து பயிற்சி அளித்தேன். 2013-ல் பதவி உயர்வு பெறும் வரை இது தொடர்ந்தது. கவரப்பேட்டை அரசுப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் ஆனேன். பெண்கள் பள்ளியில் மட்டுமே பணிபுரிந்ததால் இருபாலர் பள்ளியில் சற்றே சிரமமாக இருந்தது. பசங்களை சமாளிக்க முடியாது என்று சிலர் பயமுறுத்தினர். எதிர்மறை எண்ணங்களுடன் அணுகும்போது அவர்களும் அதுபோன்றே மாறுவர் என்று புரிந்தது. தியான முறை இந்தக் கால மாணவர்கள் கவனச் சிதறல்களுடன் வளர வேண்டிய சூழலில் இருக்கின்றனர். அதனால் அவர்களின் மனதை ஒருநிலைப்படுத்த தியானத்தை அறிமுகப்படுத்தினேன். எந்தப் பிரச்சினை என்றாலும் மாணவர்களை அழைத்துப் பேசினேன். பிரச்சினைகளை விசாரிக்க ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டது. அமைதியான ஆசிரியர், அதிரடி ஆசிரியர் என இரு தரப்பினரும் குழுவில் இருப்பர். பிரச்சினையின் விளைவுகளை மாணவர்களுக்குப் புரியவைத்ததால், மீண்டும் பிரச்சினைகள் ஏற்படவில்லை'' என்கிறார் அன்பாசிரியர் சரஸ்வதி.
2014-ல் தலைமை ஆசிரியாக மீண்டும் அசோக் நகர் பள்ளிக்கே திரும்பிய அவர், தனது அனுபவங்களையும் 2015 வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்கிறார். ''1993-ல் இருந்து 20 ஆண்டுகள் மூன்று தலைமை ஆசிரியர்களின் கீழ் பணிபுரிந்த அனுபவம் கைகொடுத்தது. அவர்கள் உருவாக்கி வைத்த, பள்ளியை நிர்வகிப்பதும் அதன் பெயரைக் காப்பாற்றுவதுமே எனது தலையாயக் கடமையாக இருந்தது. நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே சென்னை வெள்ளம் வந்தது. அதில் பள்ளியில் இருந்த பொருட்களும் நாசமாகின. மெல்ல மெல்ல அவற்றை மீட்டெடுத்தோம். வகுப்பறைகள் மற்றும் பெஞ்ச்களுக்கு புதிய பெயிண்ட் அடிக்கப்பட்டது. ஓவியங்கள் தீட்டப்பட்டன. என்ஜிஓக்கள் உதவியுடன் கணினி, புரொஜெக்டர்களை வாங்கினோம். பெற்றோர் ஆசிரியர் கழகமும் உதவிகள் செய்தது. ஆசிரியர்களின் தன்னலமற்ற பணியால், தொடர்ந்து 98 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்று வெளியே செல்ல ஆரம்பித்தனர்'' என்று புன்னகைக்கிறார்.
திரளான மாணவிகளை எப்படிக் கையாள்கிறீர்கள்? ''சில மாணவிகளின் சிந்தனைகள் வேறு திசை நோக்கிச் செல்ல வாய்ப்புண்டு. தினந்தோறும் காலை பிரேயரில் மைக்கில் பேசுவேன். ''எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்குக் கட்டாயம் தீர்வு இருக்கும்; நீங்களாக எந்த முடிவையும் தேர்ந்தெடுக்காதீர்கள்!'' என்று கூறுவேன். புரிந்துகொள்ளும் பக்குவத்தில்தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. அதையும் மீறி பிரச்சினைகள் ஏற்படும்போது பெற்றோரை அழைத்துப் பக்குவமாகப் பேசுவோம். இரு தரப்புக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்குவோம். ஒழுக்கக் கல்வியும் கற்பிக்கப்படுகின்றன. முன் அனுமதி பெறாமல் காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவிகளின் பெற்றோருக்கு வகுப்பு ஆசிரியரே போனில் அழைத்துப் பேசுவார். பெற்றோரைப் பதற வைக்காமல், பொறுமையாக விசாரிப்போம். நிலைமையை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்போம். சுத்தத்துக்கு முக்கியத்துவம் பள்ளியில் 4 உடற்கல்வி ஆசிரியைகள் இருக்கின்றனர். மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உற்சாகப்படுத்துவர். சுத்தத்துக்கும் அவர்களே பொறுப்பு. பள்ளியை 4 பிரிவுகளாகப் பிரித்து அவர்களிடம் கொடுத்துவிடுவேன். அங்கு குப்பைகள் இருந்தால், அவர்களே பொறுப்பு. ஆனால் இதுவரை நான் குப்பையையே பார்த்ததில்லை'' என்கிறார்.
மத்திய அரசின் அடல் ஆய்வகம், மாநில அரசின் ஹைடெக் ஆய்வகம், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 3 ஸ்மார்ட் வகுப்பறைகள், மன்றங்கள் என கூடுதல் சிறப்பு மையங்கள் பள்ளியை அலங்கரிக்கின்றன. இதுகுறித்துப் பேசுபவர், ''பள்ளியில் என்சிசி, என்எஸ்எஸ், கைட்ஸ், ஜேஆர்சி, ஆர்ஆர்சி, சூழல் மன்றம், பசுமை மையம், உணவுப் பாதுகாப்புக் குழு, சாலை பாதுகாப்பு மன்றம் உள்ளிட்ட ஏராளமான சிறப்புத் திறன் வளர்ப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. அதேபோல தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகியவற்றுக்கும் தனித்தனி மன்றங்கள் தொன்மையுடன் செயல்பட்டு வருகின்றன. இசை, ஓவியம், கிராஃப்ட், தையல் ஆகியவற்றுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். நவீன ஏசி அரங்கம் 500 மாணவிகள் அமரும் வகையில், அரங்கமும் எங்கள் பள்ளியில் உள்ளது. அதில் 10 ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. புரொஜெக்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாணவிகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன'' என்று மலைக்க வைக்கிறார் அன்பாசிரியர் சரஸ்வதி. நிர்வாகப் பணிகளால் கற்பித்தல் பணிகள் பாதிப்படுகிறதா என்றதற்கு, ''இல்லை. புதிதாக மாறியுள்ள பாடத்திட்டங்கள் வகுப்பெடுக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. புதிய பாடத்திட்டம் முழுவதையும் படித்துவிட்டேன். மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்கும்போது தெளிவுபடுத்துவேன்
நேரம் கிடைக்கும்போது அறநெறிக் கல்வியையும் கற்பிக்கிறேன். கற்பிப்பதலில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. கற்றலில் பின்தங்கிய மாணவிகளை, என் 'செல்லப் பிள்ளைகள்' என்றுதான் அழைப்பேன். அவர்களையும் படிக்க வைத்து, 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்தேன். அவர்களும் 'செல்ல டீச்சர்' என்றுதான் கூப்பிடுவார்கள். அன்பால் மட்டுமே எதையும் மாற்ற முடியும், உணர்த்த முடியும். புரியவைக்கவும் முடியும். உதாரணத்துக்கு ஞாயிறு அன்று சிறப்பு வகுப்பு வைத்திருப்போம். சிலர் வந்திருக்க மாட்டார்கள். அவர்களை 'ஏன் வரலை?' என்று திட்டாமல், 'எனக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு உனக்காகத்தான் வருகிறேன்' என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை நிச்சயம் அவர்கள் வகுப்பில் இருப்பார்கள், இருக்கிறார்கள். மாணவிகளின் வீட்டுச் சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பள்ளிச் சூழல் இனிமையாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதேபோல பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவிகளும் பெற்றோரும் எதிர்மறை நினைவுகளோடு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்கிறார் அன்பாசிரியர் சரஸ்வதி.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews