Search This Blog
Saturday, October 19, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்மைக் காலமாக ஆசிரியப் பேரினத்திற்கு நிகழ்காலம் போதாத காலமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. நின்று நிதானித்து மூச்சு விடக்கூட கால அவகாசம் தராமல் தொடர்ச்சியாகப் பல்வேறு கற்றல் கற்பித்தலுக்குப் பேரிடர் விளைவிக்கும் அலுவல் சார்ந்த வேலைகளை முடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போக்குகள் மலிந்துள்ளன. இவையனைத்தையும் விட்டுவிட்டுக் கிடைக்கும் இணையவழி இணைப்பைக் கொண்டு ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் சுயமாகவோ அல்லது கணிணி மையங்களிலோ நேர காலமில்லாமல் அலைந்து திரிந்து முடித்தாக வேண்டிய நிலை என்பது பரிதாபத்திற்குரியது. ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் வருகை, வாயில் எளிதில் நுழையாத பல்வேறு திடீர் திடீரென இறக்குமதி செய்யப்பட்ட சிக்ஷா, சமக்ரா, போஸான், ஸாலா ஸித்தி முதலான அழிந்தொழிந்த வடமொழிப் பெயர்களுடன் உலா வரும் மத்திய அரசுத் திட்டங்கள் என தொடர் படையெடுத்துத் தாக்குவனவற்றைச் சூதானமாக நிறைவேற்றி முடிக்க இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் படும் துயரங்கள் சொல்லவொணாதவை.
ஆசிரியர் மீதான துல்லியத் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுவது சகிப்பதற்கில்லை. போதுமான தகவல் தொடர்பும் இணையவழி இணைப்பும் கிடைக்கப் பெறாத, போக்குவரத்து வசதியற்ற, தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து நிவர்த்தி செய்ய இயலாத குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகளை ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு மேற்கொள்ள அதிகார சாட்டைச் சொடுக்குவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இது போதாதென்று வயது வேறுபாடின்றி யார் யாரோ ஆசிரியர்களுக்குப் பல்வேறு ஊடகங்கள் மூலமாக, 'ஆசிரியர் என்பவர் இப்படி இருக்க வேண்டும்; அப்படி விளங்க வேண்டும்' என்று வாய்வலிக்க புத்திமதி புகட்டுவது மறுபுறம். நல்ல விளைச்சல் நிலத்தில் ஓரிரு களைச் செடிகள் காணப்படுவதைப் போல நல்லாசிரியர் பெருமக்கள் திரளில் ஒருசில புல்லுருவிகள் இருப்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதற்கு ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தை எப்போதும் ஒருவித பதட்டத்தில் வைத்திருக்க நினைப்பது பேதமையாகும்.
அடுக்கடுக்காகத் தொடுக்கும் ஆயிரம் கொடும் அம்புகளைத் துச்சமாகப் புறந்தள்ளி ஏழை எளிய அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வி நலனே தம் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு தம் மனசாட்சிக்கு மட்டும் செவிமடுத்துத் தீயாய் பணிபுரியும் ஆசிரியர் கூட்டம் அன்றும் இன்றும் என்றும் இருப்பது மறுப்பதற்கில்லை. அந்த வகையில் காவிரிக் கடைமடைப் பகுதியான, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் திரு சே.கணேஷ் அவர்களது கல்வித் தொண்டு அளப்பரியது.
பல்துறை அறிவும் மொழிப்புலமையும் கொண்ட மகாகவி பாரதியே கணிதம் குறித்து, 'கணக்குப் பிணக்கு ஆமணக்கு' என்று கசந்த நிலையினை சாதிய, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய அரசுப்பள்ளிப் பிள்ளைகள் அடையாதவாறு கற்கண்டு கணிதம் என்று தித்திக்க வைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எளிய, விளையாட்டு மற்றும் தானே செய்து கற்றல் முறைகளில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கணிதத் தேற்றங்கள் மற்றும் கணக்குகள் ஆகியவற்றை இவர் இலகுவாக மாணவ, மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் உத்தி ஏனையோருக்குப் பாடம் எனலாம். கணித உருவங்கள் பெயரில் குழு உருவாக்கி வடிவியல் கருத்துக்களை தாமே செய்து கற்றல் முறையில் மகிழ்ச்சியாகக் கணிதத்தைக் கற்கும் சூழலை வடிவமைத்து தந்தது பாராட்டத்தக்கதாகும்.
அதுபோலவே, ஒழுங்கற்ற உருவங்களின் பரப்பு காணும் முறைக்கு வரைபடங்களைக் கொண்டு வரையச் செய்து விளக்கம் அளித்துள்ளது சிறப்பு. பொதுவாகவே, கணித கருத்துக்களை எளிய விளையாட்டுகள் மூலமாகக் கற்க ஆசிரியர்கள் மாணவர் மைய அணுகுமுறையை வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் கற்பித்தலில் உட்புகுத்தி வெற்றி காண்பது இன்றியமையாதது. இவையெல்லாம் தொடக்கநிலைக்குத் தான் சாத்தியம் என்றும் பொருத்தம் என்றும் புறம்தள்ளும் நடவடிக்கைகளை உயர் தொடக்க, உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் கருதுவது ஏற்கத்தக்கதன்று. அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் மாணவர் நிலைக்கு இறங்கி வருவதைக் கீழான செயல் என நினைக்காமல் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத கணிதக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள மாணவருக்கு இடமளிக்க வேண்டியது ஆசிரியரின் கடனாகும்.
கணிதம் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். ஏனெனில், இக்கால பச்சிளம் குழந்தைகள்கூட பெரியவர்கள் கையாள அச்சப்படும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வெகு இயல்பாக, மிக இலாவகமாக, அசாத்தியமாகப் பயன்படுத்தி வருவது கண்கூடு. இன்றும் சில ஆசிரியப் பெருமக்கள் திறன்மிகு செல்பேசியைத் திறமுடன் கையாளத் தெரியாமல் தவிப்பதைக் காண முடியும். ஆதலாலேயே, ஆசிரியர்களுக்கு அண்மைக்காலத்தில் வழங்கப்படும் பயிற்சிகளில் ஆன்ட்ராய்டு செல்பேசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் வகுப்பறைகளில் செல்பேசி உள்ளிட்ட கருவிகள் துணைக்கொண்டு கற்பித்தலை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.
காலந்தோறும் நிகழும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் ஆசிரியர்கள் பிழைத்துக் கொள்கின்றனர். அவ்வாறின்றித் தேங்கிக் கிடப்போர் பல்வேறு வகையான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இவ் ஆசிரியர் முதல்வகை. கற்பித்தலில் ஏமாற்றங்களைத் தவிர்க்க புதிய மாற்றங்களுக்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு கற்றலில் புதுமைப் படைத்து வருவது முன்மாதிரி செயலாகும். கணிணியில் கணிதத்தை மாணவர்கள் எளிதாகவும் விரைவாகவும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வது மட்டுமல்ல. கற்றலில் மிகவும் பின்தங்கிய, மெல்ல மலரும் மாணவர்களிடையே அதிகம் காணப்படும் தொடர் விடுப்பு மற்றும் இடைநிற்றல் போக்குகள் கணிணிவழிக் கற்றலால் மாறி வருகின்றன. மாணவர்கள் நாடோறும் பள்ளி வருவதை இது ஊக்குவிக்கிறது.
விலையுயர்ந்த கற்றலுக்கு உதவும் இதுபோன்ற கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பழுதாகிப் போய்விடும் என்று கருதி இரும்பு அலமாரிக்குள் மிக பாதுகாப்பாக, பயன்படுத்தாது வைத்திருக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. மாணவர்கள் தம் கற்றலுக்காகப் பயன்படுத்திப் பழுதாகிப் போவதே சாலச்சிறந்தது. இவரது கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் மிகுந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதுமட்டுமின்றி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வு வழித் தகுதித் தேர்வு (NMMS) மூலமாக மாதந்தோறும் கிடைக்கப்பெறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகையானது தம் பள்ளிப் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லாமல் ஒன்றியத்தில் உள்ள தகுதியும் ஆர்வமும் மிக்க ஏனைய பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்திட தன்னார்வ பயிற்சி வகுப்புகளை இவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த உயரிய செயல் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும். இதற்கு இவருடைய சக ஆசிரிய நண்பர்கள் மனமுவந்து எல்லா வகையிலும் உதவி வருவது பாராட்டத்தக்கது.
மேலும், இப்பயிற்சியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு அறுசுவை உணவுடன் பயிற்சிக்குப் பின் மாணவர்கள் பயிற்சியில் கற்றுக்கொண்டவற்றை வீட்டிலும் ஓய்வு நேர வகுப்பிலும் வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அதற்குண்டான பல பக்கங்கள் நிறைந்த கற்றல் பொருள்கள் விலையில்லாமல் வழங்கி வருவதும் இவரது சமூக சேவைக்குத் தக்க சான்றாகும்.
அறியாமை இருளை அகற்றுவதுதான் ஆசிரியரின் தலையாயப் பணி. அந்த வகையில் இவர் தாம் கற்றுக்கொண்ட புத்தாக்க அறிவை மற்றவர்களுக்குக் கடத்துவதை சமுதாயப் பணியாகக் கொண்டுள்ளதை இவரது கற்கண்டு கணிதம் இணையதளம் பறைசாற்றும். மாணவர்களை மட்டுமல்லாது சக ஆசிரியர் பேரினத்தையும் தம் அரும்பெரும் செயல்களால் ஒளிரச் செய்து கொண்டிருக்கும் இவர் ஓர் ஒப்பற்ற ஒளிரும் ஆசிரியர் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது!
இன்னும் தொடர்வார்கள்...
முனைவர் மணி கணேசன்
9442965431
நன்றி : திறவுகோல் மின்னிதழ்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஒளிரும் ஆசிரியர் -கணிதத்தைக் கற்கண்டாக்கி வரும் ஒப்பற்ற ஆசிரியர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.