அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டும் மாணவர்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டும் மாணவர்கள்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், குறைந்த கட்டணமே வாங்கப்படும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் 6800 இடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... தமிழகத்தில் 5 கட்டங்களாக நடைபெற்று வரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், 2 கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் எந்த ஆண்டும் இல்லாத விதத்தில் அதிக இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள் என தமிழகத்தில் 37 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 15 ஆயிரத்து 8 இடங்களில், தற்போது வரை 8153 இடங்களே நிரம்பி உள்ளன. இன்னும் 6 ஆயிரத்து 855 இடங்கள் காலியாக உள்ளன. இது தவிர 442 சுயநிதி கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளன. முன்னணியில் உள்ள சில தனியார் கல்லூரிகளை தேர்வு செய்யவே மாணவர்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அரசு கல்லூரிகளில் படிக்க கடும் போட்டி நிலவிய காலம் மாறி, தற்போது புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் கோவை, சேலம், காரைக்குடி கல்லூரிகளில் மட்டும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. மற்ற அரசு கல்லூரிகளில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வழக்கமாக 180 கட் ஆப் மதிப்பெண்களுக்குள், அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கான இடங்களும் நிரம்பிவிடும். இந்த ஆண்டு 150 கட்ஆப் மதிப்பெண் வந்த பிறகும் 60 சதவீதம் இடங்கள் கூட நிரம்பவில்லை.
வளாக நேர்காணல், உள்கட்டமைப்பு வசதி, போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லை போன்ற காரணங்களால் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் கிடைப்பதால் அங்கு சேர்வதாக மாணவர்கள் தெரிவித்தனர். அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிகபட்ச ஆண்டு கட்டணமே 30 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் சில தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன. எனினும், தனியார் கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கு ஏற்ப கூடுதலான பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதும் மாணவர்கள் அங்கு சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. படித்து முடித்த உடன் மாணவர்களுக்கு வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பெரிய கார்பரேட் நிறுவனங்களுடன் பல தனியார் கல்லூரிகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. ஆனால் அரசு கல்லூரிகளில் அவ்வாறு எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. எத்தனை சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், எத்தனை மாணவர்களுக்கு தங்களது கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு கிடைத்தது என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தனியார் கல்லூரிகள் உள்ளன. எனவே சிறப்பான தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு கொடுப்பதற்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்படுத்துகின்றன. அரசு கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட போதும், அவர்களுக்கு எந்த இலக்குகளும் நிர்ணயிக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு கல்வித்தரத்தை எதிர்பார்க்க முடியாது என்பதும் பெற்றோரின் ஆதங்கமாக உள்ளது.
அரசு கல்லூரியில் படித்த காரணத்திற்காகவே வேலைக்கு சேர்த்து கொண்ட நிலை மாறி, தகுதியான, திறமையான மாணவர்களையே கார்பரேட் நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகளில் ஆய்வகம் உள்ளிட்ட எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. அதிலும், தமிழ்வழி பொறியியல் படிப்புகளை யாருமே சீண்டுவதில்லை. பல அரசு கல்லூரிகளில் நிரந்தரமான பேராசிரியர்கள் இல்லை. தற்காலிகமாக குறைந்த ஊதியத்திற்கு நியமிக்கப்படுகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய குறைபாடுகளை அரசு கவனத்தில் கொண்டு சரி செய்யாவிட்டால், கல்வித்தரம் அதலபாதாளத்திற்கு சென்று விடும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்னர். அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, போதிய பேராசிரியர்களை பணியில் அமர்த்துவதோடு, கல்வி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் அரசு கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் கவனம் திரும்பும்...
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews