நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன: ஏஐசிடிஇ தலைவர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் மாணவர் சேர்க்கை இல்லாததால் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்தார். அகில இந்திய அளவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் ஹார்டுவேர் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்கும் இப்போட்டியில், தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உருவாக்கியுள்ளனர். இந்த ஆண்டு 124 பிரச்னைகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வு காண இந்த ஹார்டுவேர் ஹேக்கத்தான் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, 18 மையங்களில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டி, கோவை, சரவணம்பட்டியிலும் நடைபெற்றது. கே.சி.டி. பார்க்கில் உள்ள போர்ஜ் நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 குழுக்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
ஹேக்கத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக அனில் சகஸ்ரபுதே பங்கேற்று, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள், கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சர்வதேச அளவில் கண்டுபிடிப்புகளில் 85-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 4 ஆண்டுகளில் 57-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வுகளைத் தரும் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசும், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கின்றன. கண்டுபிடிப்புகளின் தன்மையைப் பொருத்து நிதியுதவியின் அளவும் மாறுபடும். கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட பல தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், ஆலோசனைகளைப் பெறவும் இத்தகைய ஹேக்கத்தான் போட்டிகள் பெரிதும் உதவுகின்றன. கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு என புதிதாக 2 ஆண்டு மேலாண்மைப் படிப்பை நடத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தப் படிப்புகளால், புதிய கண்டுபிடிப்புகளும், செயல்முறைகளும் ஊக்குவிக்கப்படும். போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால், அகில இந்திய அளவில் கடந்த ஆண்டு 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம் பொறியியல் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் குறைவாக சேர்ந்துள்ளனர். இதற்காக பொறியியல் கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகக் கருத முடியாது. ஒருபுறம் கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மறுபுறம் புதிய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்படுகின்றன.
நாடு முழுவதிலும் தரமில்லாத பொறியியல் கல்லூரிகள் உள்ளனவா என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கண்காணித்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக் கட்டண ஒழுங்குமுறைக் குழு செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று, அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் தற்போது உள்ள சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த பிறகுதான் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொறியியல் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றார். இதைத் தொடர்ந்து ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனில் சகஸ்ரபுதே பரிசு வழங்கினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews