முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 17, 2018

முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வலியுறுத்தல்

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்களை காலி எண்ணிக்கை அளவுக்கு முழுமையாக நிரப்ப வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்க மாநிலத்தலைவர் ஆ.ராமு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 5 மாதங்களில் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றிய பலர் பணி ஓய்வு பெற்றதாலும், பதவி உயர்வில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆனதாலும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாலும் 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உருவாகும் மொத்த காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் இந்த இரண்டு வகையிலும் கடந்த 4 மாதங்களாக முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாநில பெற்றோர்கள் கழகம் மூலம் ரூ.7500 ஊதியத்தில் பகுதி நேரத்தில் பணியாற்ற 1,464 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது பகுதிநேர முதுகலை ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கையாக பள்ளிக்கல்வித் துறை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பகுதிநேர முதுகலை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 76 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 30 காலிப்பணியிடங்களை நிரப்ப மட்டுமே ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 60 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்றே அனைத்து மாவட்டங்களிலும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளியிலிருந்து முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் வாரத்திற்கு 2 நாட்கள் சென்று கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆணை வழங்கி வருகின்றனர். 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை நடத்தி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவும், தன்னிடம் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கவும், விலையில்லா நலத்திட்டப் பொறுப்பு பணிகளை தங்கு தடையின்றி செய்யவும், அலுவலகப் பணிகளை செய்யவும், விடுமுறை நாட்களிலும் நீட், ஜே.இ.இ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், என பணிபுரியும் பள்ளியிலேயே அளவுக்கு அதிகமான பணிகளை முதுகலை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பணிபுரியும் பள்ளியில் வாரத்திற்கு 3 நாட்களும், காலிப்பணியிடம் உள்ள பள்ளியில் மாற்றுப்பணியாக இரண்டு நாட்களும் முதுகலை ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபடுவதால் இரண்டு பள்ளி மாணவர்களையும் சரியாக கவனிக்க முடியாமலும் அதனால் அவர்கள் பாதிக்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது. எனவே தமிழகமெங்கும் மாற்றுப்பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்களை உடனடியாக அப்பணியிலிருந்நு விடுவிக்க வேண்டும். இனி வரும் நாள்களிலும் முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் நிரப்பப்படாடமல் இருக்கின்ற 1,500-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக உடனடியாக மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பகுதி நேர முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடர்ச்சியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு தேதியை அறிவித்தும், 3000-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews