வேண்டாம் "ALL PASS" ,பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம் ,வாசித்தல் தெரியவில்லை !-NAS சர்வே - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 22, 2018

வேண்டாம் "ALL PASS" ,பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம் ,வாசித்தல் தெரியவில்லை !-NAS சர்வே

இன்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு, கூட்டல், கழித்தல் உள்ளிட்ட அடிப்படை கணிதம் தெரியவில்லை. சிலருக்கு வாசிக்கவே தெரியவில்லை. அடுத்தாண்டு பொதுத்தேர்வை சந்திக்கப் போகும் இம்மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதா, ஆரம்பக்கல்வி கற்றுத் தருவதா என புலம்புகின்றனர் ஆசிரியர்கள். இன்று, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் வசதிகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், கற்றல் முறையில் அரசுப்பள்ளிகள், இன்னும் பல மைல் துாரம் செல்ல வேண்டும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தாலும், அரசின் கொள்கைகள், மாணவர்களின் கல்வித்தரத்தை முடக்குகிறது என்று குற்றச்சாட்டுகின்றனர் ஆசிரியர்கள். அடிப்படை கற்றலில் உள்ள குறைபாட்டை, அந்தந்த வகுப்பிலேயே, நிவர்த் தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு கடத்தி விடுவதால், உயர்நிலை வகுப்புகளில் திணறுகின்றனர். இந்நிலையில் நவ.,30க் குள், மாணவர்களை வாசித்தலில், தேற்றி விட வேண்டுமென, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்கள் தடுமாற்றம் உத்தரவெல்லாம் சரி...இப்போது சொற்களை வாசிக்க கற்று தருவதா அல்லது, அந்தந்த வகுப்பு பாடத்திட்டத்தை நடத்துவதா... என்பதுதான், ஆசிரியர்களின் கேள்வி. இதற்கான தீர்வு, அடிப்படை கல்வியை வலுவாக்குவதில் தான் உள்ளது என்கிறது, மத்திய அரசு வெளியிட்ட, 'நாஸ்' தேர்வு முடிவு அறிக்கை. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், கடந்தாண்டு நடத்திய, தேசிய கற்றல் அடைவுத் தேர்வு (நாஸ்), மூன்று, ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை தோலுரித்து காட்டியுள்ளது.
தினசரி வாழ்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியலின் பயன்பாடு குறித்து, பல மாணவர்களுக்கு தெரியவில்லை. தொடக்க, நடுநிலை வகுப்புகளில், பாடத்தின் அடிப்படை புரிதலே இன்றி, மனப்பாட முறையில் மாணவர்கள் படிப்பதாக, ரிசல்ட் முடிவுகள், வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கோவை மாவட்டத்தில், 104 பள்ளிகளில், கடந்தாண்டு நடந்த 'நாஸ்' தேர்வில், எட்டாம் வகுப்பு கணித பாடத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, 10 மாணவர்கள் மட்டுமே, சரியாக பதில் அளித்துள்ளனர். 'ஆல் பாஸ்' முறைதான், இப்படி அடிப்படை கல்வி தரம் குறைய, முக்கிய காரணம் என, கல்வியாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சின்னமேட்டுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜெயந்தி கூறிய தாவது:அடிப்படை கல்வி குறித்து எழும், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியதும், தீர்வு காண்பதும், ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. முறையாக கற்பித்தால், பிற மாநில மாணவர்களை கூட, பிழையின்றி தமிழில் எழுத வைக்கலாம். இதற்கு 'போர்டு வித் டீச்சர்' முறை பலனளிக்கும். ஒன்றாம் வகுப்பில் இருந்து, ஐந்தாம்வகுப்பு வரை, ஒரே ஆசிரியர் மாணவர் களுக்கு கற்பிக்க அறிவுறுத்தலாம்.இதில் வகுப்பு வாரியாக, கற்கும் திறனில் மாற்றம் ஏற்படாவிடில், உரிய ஆசிரியரின் கற்பித்தல் முறையில் சிக்கல் இருப்பதை அறிய முடியும்.
இவர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.54.8 சதவீதம் பேருக்குவாசிக்க தெரியவில்லை!ஏசர் என்ற தனியார் நிறுவனம், 2017ல், தொடக்க கல்வி தரத்தை, பல நிலைகளாக பிரித்து, அக்குவேர் ஆணிவேராக, ஆய்வு செய்தது. இதில், ஐந்தாம் வகுப்பில், 54.8 சதவீத மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்க தெரியவில்லை.
எட்டாம் வகுப்பு மாணவர்களில், 55 சதவீத மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. ஆங்கில பாடத்தில், எளிய வாக்கியங்களை, 58 சதவீத மாணவர்களால் மட்டுமே வாசிக்க முடிவதாக விளக்கி உள்ளது.'கற்பித்தலில் மாற்றம்கொண்டு வர திட்டம்'தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி கூறுகையில்,''புதிய சிலபஸ் படி, தொடக்க கல்வியில், கற்பித்தல் முறையை மாற்றியுள்ளோம். கற்றலில் பின்தங்கிய குழந்தைகளுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம் வழிநடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., சார்பில், இக்குழந்தைகளின் கல்வி தரம் கண்காணிக்கப்படுகிறது. வரும் காலங்களில், 'நாஸ்' போன்ற போட்டித் தேர்வுகளை, எதிர்கொள்ளும் வகையில், கற்பித்தல் முறையில், மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews