நிதி உதவி பெறும், பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை சென்சஸ் பணிக்கு நியமிக்கலாம் - அரசு அதிரடி திருத்தம்
நிதி உதவி பெறும், பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை சென்சஸ் பணிக்கு நியமிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி - 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளை மத்திய அரசு திருத்தியது. முழு விவரம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளில் அரசு திருத்தம் - முழு விவரம்
புதுடெல்லி, அக்.17: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி (Census 2026) தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு மிக முக்கியமான விதி திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
1990-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின்படி, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் மட்டுமே கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு வந்தனர். தனியார் அமைப்புகளின் ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை இருந்தது.
தற்போது இதனை தொடர்ந்து இந்திய பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில், "ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது எந்தவொரு அதிகாரி அல்லது எந்தவொரு நபரையும் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களாக நியமிக்கும் வகையில் 1990ம் ஆண்டு விதிகளை அரசு திருத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் யாரை நியமிக்கலாம்? புதிய விதி சொல்வது என்ன?
புதிய திருத்தத்தின் படி, கீழ்க்கண்ட நபர்கள் இனி கணக்கெடுப்பாளராக (Enumerator) பணியாற்றுவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்படலாம்.
- (1) அரசு, உள்ளாட்சி அமைப்பின் உதவி பெறும் அல்லது உதவி பெறாத தனியார் அமைப்புகள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளின் எந்தவொரு கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள்
- (2) ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு அல்லது நிறுவனங்களின் எழுத்தர்கள் அல்லது எந்தவொரு அதிகாரியும்
- (3) மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் பொருத்தமானவர் என்று கருதும் எந்தவொரு நபரும் கணக்கெடுப்பாளராக பணியாற்றுவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்படலாம்
ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு?
இதனால் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், குறிப்பாக நிதி உதவி பெறாத பள்ளி ஆசிரியர்களும் இனி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் கட்டாயம் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு Census பணிக்கு போதிய ஆட்கள் இல்லாத பற்றாக்குறையை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Source: இந்திய அரசிதழ் அறிவிப்பு - பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.