பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி: உத்தரவை நிறுத்தி வைத்ததா? தமிழக அரசு
'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.
கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது. மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த கல்வித்துறையின் அறிவிப்பை குறை கூறினர். மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி, ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்படிவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பு வருவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.