போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 16، 2025

Comments:0

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!



போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை, விஐடி பல்கலைக்கழகம் சாா்பில் வேலூா் மாவட்ட அரசு பள்ளி மாணவா்களின் வெற்றிக்கான சவால்கள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் விஐடி அண்ணா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களை சோ்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் பங்கேற்றுப் பேசியது:

மாணவிகளை ஆசிரியா்கள் குழந்தைகளாகப் பாவிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியா்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

மாணவா்களுக்கு சரியான முறையில் பாடங்களை கற்றுத் தரவேண்டும். பள்ளியை மாணவா்களுக்கு பிடித்த இடமாக மாற்ற வேண்டும். பள்ளிகளில் நன்னெறிகளைக் கற்றுத்தர வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

நிகழாண்டு 1,200 உடற்கல்வி ஆசிரியா், 3,000 பட்டதாரி ஆசிரியா், 2,500 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. நபாா்டு மூலம் ரூ.3,000 கோடியில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 885 மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

ஆசிரியா் பணி தொழில் அல்ல, அது தொண்டு. கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். உலகளவில் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 101-ஆவது இடத்தில் உள்ளது. பள்ளிக்கல்வியில் தமிழகத்தை மேம்படுத்த தென்கொரியாவுக்கு ஒரு குழுவை அனுப்பவேண்டும் என கல்வி அமைச்சரிடம் கூறியுள்ளேன்.

கல்விக்கு அதிகமாக செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபா முதலிடத்தில் உள்ளது. அவா்கள் 11.5 சதவீதம் கல்விக்கு செலவழிக்கின்றனா். இந்தியா இன்னும் 3 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவழிக்கிறது. வேலூா் மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் மூலம் 10 ஆண்டுகளில் பத்தாயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். இதில், மூன்றில் இரு பங்கு பெண்கள் பெற்றுள்ளனா். உயா்கல்வி வீட்டையும் நாட்டையும் மாற்றும்.

வெளிநாடு சென்று சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகை கடந்தாண்டு மட்டும் 11 லட்சம் கோடி. நம் உயா்கல்விக்கு அதிகமாக செலவழித்தால் இத்தொகை மேலும் உயரும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஒரு மதிப்பெண் வினா-விடை புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் பெற்றுக்கொண்டாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், மாவட்ட கல்வி அலுவலா் சத்திய பிரபா, விஐடி பேராசிரியா்கள் மீனாட்சி, கோவா்தன், தலைமை ஆசிரியா்கள் சிவவடிவு, குலசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة