பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مايو 30، 2025

Comments:0

பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய கடிதம்

'P.ET பீரியடில் மாணவர்களை விளையாட வைங்க' - தமிழக பள்ளிக் கல்வித்துறை!
தமிழ்நாட்டில் ஜூன் 2 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முக்கிய கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், '' பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய வழி குற்றங்களிலிருந்து மாணவர்களைத் தற்காத்து கொள்ளவும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர எதிர்காலத் தொழில் நுட்பங்களுள் ஒன்றான எந்திரவியல் மன்றங்களையும் கணினி அறிவியல் ஆசிரியர் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் துவங்க வேண்டும்.

இளம் கண்டுபிடிப்பாளர் விருது

பள்ளியளவில் ஒவ்வொரு மாதமும் கணினி நிரல் எந்திரவியல் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும், நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் நடைபெறும் பள்ளி புத்தாக்கத் திட்டப் போட்டிகளில் (School Innovation Development Project) வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கண்டுபிடிப்பாளர் விருது (Young Innovator) தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும்.

வருகை நேரத்தை கடைபிடிக்க வேண்டும்

இளஞ்செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சாரண சாரணியர், செஞ்சுருள் மன்றம் மற்றும் பள்ளி உடல் நல மன்றம் போன்றவற்றிற்கான செயல்பாடுகளை பள்ளி வேலை நாட்களில் செயல்படுத்தலாம். பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள் தினமும் வருகை நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

'விளையாட வைக்க வேண்டும்'

உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும். வாரத்தில் ஒருநாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை, 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர், உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்க கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்க கூட்டத்தில் மாணவர்களை தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை அன்று காலை வணக்ககூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு கவிதை, சுவரொட்டி, நாடகம்,பாட்டு,திருக்குறள் கதைகள் இடம்பெறலாம். முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும் தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة