தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை கணக்கிடுவதில் குளறுபடி
1 லட்சம் இழப்பு ஏற்படுவதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்
மதுரை தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அரசு விதிகளுக்கு புறம்பாக ஈட்டியவிடுப்பை குறைத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் கணக்கீடு செய்வதால் ஓய்வுபெறும் நாளில் ரூ.1 லட்சம் வரை பண இழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் விடுப்பு விதிகள்படி (விதி 9 ஏ) ஊதியமில்லா அசாதாரண விடுப்புகளுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பை குறைக்க வேண்டும் என உள்ளது. அதன்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் அவர்களது இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு நாட்களை ஒப்படைப்பு செய்து இழப்பின்றி பணம் பெறுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அதன்படி கணக்கிடாமல் விதிகளுக்கு புறம்பாக ஊதியம் பெறும் சாதாரண விடுப்புகளான மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, கருச்சிதைவு தவு விடுப்பு போன்றவற்றுக்கு ஈட்டிய விடுப்பை குறைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கணக்கீடு செய்கின்றனர்.
இதனால், தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் தங்களது ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக பெறும்போது சுமார் ரூ.1 லட்சம் வரை இழக்கின்றனர்.
எனவே, தொடக்கக் கல்வி இயக்குநர் ஈட்டிய விடுப்பை உரிய முறையில் கணக்கீடு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, பண இழப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.