மும்மொழிக் கொள்கையால் அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்: பள்ளிக் கல்வி அமைப்பு எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 11، 2025

Comments:0

மும்மொழிக் கொள்கையால் அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்: பள்ளிக் கல்வி அமைப்பு எச்சரிக்கை



மும்மொழிக் கொள்கையால் அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்: பள்ளிக் கல்வி அமைப்பு எச்சரிக்கை Three-language policy will affect all states: School education body warns

தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் புதிதாக இணையதளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மும்மொழிக் கொள்கையால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளிக்கல்வி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மக்களிடையே எடுத்துச்செல்லும் வண்ணம் பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் www.thesamacheerkalvi.in என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் இக்ஸா மையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் பி.ரத்தினசபாபதி, பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரான பி.ஆர்.முரளி-மு.நந்தினி ஆகியோர் புதிய இணையதளத்தை தொடங்கிவைத்தனர்.

பின்னர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்பட எந்த மாநிலமும் ஏற்காது. காரணம் இது தமிழத்துக்கு மட்டும் பாதிப்பு அல்ல. வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மும்மொழிக்கு கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்வதற்காக புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம்.

ஒரு குழந்தை தொடக்கக்கல்வியை எந்த மொழியில் கற்கிறதோ அந்த மொழியில்தான் உயர்கல்வி வரை கற்க வேண்டும். தேவைக்காக ஆங்கிலம் படிக்கலாம். இதுதான் இருமொழிக்கொள்கை. மூன்றாவதாக ஒரு மொழியை படித்தால் என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. புதிதாக இன்னொரு மொழியை படிக்கும்போது குழந்தைகளுக்கு தேவையில்லாத மனஅழுத்தும் ஏற்படும். அந்த மொழித் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் டியூஷன் வைக்க வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற செலவு ஏற்படும்.

மும்மொழிக்கொள்கையில் எங்கேயும் இந்தி திணிக்கப்படவில்லை என்று சிலர் கூறலாம். இந்தி மொழியை பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும்போது எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் உருது உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் மட்டும் தேவை அடிப்படையில், குறைந்தபட்ச எண்ணிக்கை என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சி இல்லையா? மொழி ஆசிரியர்கள் நியமனத்தில் ஏன் இந்த பாகுபாடு? பிஎம் ஸ்ரீபள்ளி, ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ், மாடல் ஸ்கூல் என்று பள்ளிகள் இடையே ஏன் பாகுபாடு ஏற்படுத்துகிறீர்கள்?. அந்த பள்ளிகளுக்கு மட்டும் ஏன் அதிக நிதி வழங்க வேண்டும்?. மற்ற பள்ளிகளில் படிப்பவர்கள் மாணவர்கள் இல்லையா? இவ்வாறு பாகுபாடு பார்ப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தேசிய கல்விக்கொள்கை பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. இளங்கலை படிப்புக்கு நுழைவுத்தேர்வு, விரும்பினால் பட்டப்படிப்பை இடையில் நிறுத்தலாம், விரும்பினால் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம்.

ஒரு பாடத்தில் அடிப்படை விஷயங்கள் படிக்காதவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி அப்பாடத்தில் மேற்படிப்பை தொடரலாம் என்பது போன்ற அம்சங்கள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், அவை உயர்கல்வியை சிதைத்துவிடும். யுஜிசி வரைவு அறிக்கையைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா வரைவு அறிக்கையை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் கிராமங்களில் எந்த அரசு கல்லூரியும் இருக்காது என்று நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுவின் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் எச்சரிக்கை செய்துள்ளார். மத்திய அரசு உயர்கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி அதை சிதைக்க முயற்சி செய்கிறது,” என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் சி.எஸ். ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச்சங்க மாநிலத் தலைவர் அருமைநாதன், கல்வியாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة