பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியீடு - Plus 2 public examinations concluded: Results to be released on May 9
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற இயற்பியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் இயற்பியல் வினாத்தாள் சற்று கடினமாகவும், பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘இயற்பியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் கேள்விகளில் சில கடினமாக இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சிக்கு சிக்கல் இருக்காது. அதேபோல், கலைப்பிரிவு பாடமான பொருளியல் கேள்வித்தாள் எளிதாக இருந்தது’’என்றனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் கழிப்பறையில் பட்டாசு வெடித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையிலும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.