10th, 11th, 12th Class Public Examination: Examination Department is busy with the final stages of work 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை தீவிரம்
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் போன்ற இறுதிகட்ட பணிகளை தேர்வுத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 வகுப்பில் 8.21 லட்சம் மாணவர்கள், பிளஸ் 1-ல் 8.23 லட்சம் பேர், பத்தாம் வகுப்பில் 9.13 லட்சம் பேர் என மொத்தம் 25.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை அலுவலர் நியமனம் உட்பட இறுதிகட்ட பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து தேர்வுத் துறை அலுவலர்கள் சிலர் கூறும்போது, ''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், பொதுத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 11-ம் வகுப்பு தேர்வுக்கு 44,236 பேரும், 12-ம் வகுப்புக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858-ம், 11, 12-ம் வகுப்புக்கு தலா 4,470-ம் நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபார்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன'' என்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.