எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வலியுறுத்தல் - Urge to release postgraduate teachers from the Numeracy and Literacy program
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மதிப்பீட்டு பணிக்கான கள ஆய்வாளர்கள் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள், நீட் உள்பட தொழிற்கல்விக்கான பயிற்சிகள், உயர்கல்வி வழிகாட்டல், நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட கற்றல் சாரா பணிகளுக்கான தொடர் பணிகள் அனைத்தும் மேல்நிலைக் கல்வி தொகுதியில் முதுகலை ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்துக்கு கள ஆய்வாளர்களாக மதிப்பீட்டுப் பணிக்கு முதுகலை ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர் நலன் சார்ந்து தமிழக அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை எதிர்க்கவில்லை. ஆனால் அத்திட்டங்களுக்கு என தனி ஒருங்கிணைப்பாளர்களை, நிர்வாக அலுவலர்களையும் நியமித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, தொடக்கக் கல்வித் துறையில் கொண்டு வந்திருக்கும் மாணவர் நலன் சார்ந்து திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு வட்டார வள மைய அலுவலர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட திட்டம் சார்ந்து அலுவலர்களை மதிப்பீட்டு பணியில் அரசு பயன்படுத்த வேண்டும். அல்லது வட்டார வளமைய அலுவலராக மூத்த முதுகலை ஆசிரியர்களை நியமித்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் பாடப் பகுதிகளை முடித்து, மாணவர்களை தயார் படுத்த போராடிக் கொண்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களை, ஆய்வாளர்கள் பணிக்கு நியமித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும்” என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.