How to Prepare for a Public Exam? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أكتوبر 23، 2024

Comments:0

How to Prepare for a Public Exam?



பொதுத் தேர்வுக்கு திட்டமிட்டு படிப்பது எப்படி?

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுவிட்டது.‌ பிளஸ் 2 மாணவர்களுக்கு நான்கு மாத காலமும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து மாதங்களும் இருக்கின்றன. தேர்வுக்கு நாள் குறித்த பிறகு மாணவர்களிடம் சற்று கூடுதலான பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கும்.‌ பரபரப்பாக இருக்கலாம், பதற்றமாகத்தான் இருக்கக்கூடாது. இனி வரும் நாட்களில் திட்டமிட்டுப் படிப்பது எப்படி?

பள்ளி நேரம் போக மீதமுள்ள நாட்களை ஒவ்வொரு பாடத்துக்கும் இத்தனை நாட்கள் என்று உங்கள் மன விருப்பத்துக்கு ஏற்ப கால அட்டவணை தயார் செய்யுங்கள்.‌ உதாரணமாக தமிழுக்கு 10 நாட்கள், ஆங்கிலத்துக்கு 10 நாட்கள், முதன்மை பாடங்களுக்கு தலா 20 நாட்கள், திருப்புதலுக்கு 20 நாட்கள் என்று திட்டம் வைத்துக் கொள்ளுங்கள். 10 நாட்களில் தமிழ்ப் பாடத்தை முடிக்க வேண்டும் என்றால் ஒரு நாளில் முடிக்க வேண்டிய பாடங்களை திட்டமிடுங்கள். பிறகு ஒரு மணி நேரத்தில் எவ்வளவு முடிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.‌ இலக்கு வைத்து நகர்கிறபோதுதான் ரத்தம் சுறுசுறுப்பாகச் சுற்றி வரும். உற்சாக ‘டார்கெட்’:

விரைவில் இரண்டாவது இடைப்பருவத் தேர்வு அதைத் தொடர்ந்து அரையாண்டுத் தேர்வு, பிறகு திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு தேர்விலும் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்று இலக்கு வைத்துப் படியுங்கள். முதலாவதாக இடைப்பருவத் தேர்வில் நீங்கள் குறிவைத்த கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று விட்டால், அரையாண்டு தேர்வில் இன்னும் ஒரு பாடத்தை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி திருப்புதல் தேர்வுவரை ஒவ்வொரு பாடத்திலும் இலக்கு நிர்ணயித்து நகரும்போது பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.

விடுமுறை நாட்களில்:

மழை, திருவிழாக்களுக்கான உள்ளூர் விடுமுறை போன்ற எதிர்பாராமல் வரும் விடுமுறை நாட்களில் படிப்பதற்கு என்றும் எழுதிப் பார்ப்பதற்கு என்றும் ஒரு திட்டம் இருக்க வேண்டும். பொதுவாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அவசியமான விசேஷங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது உறவினர்கள் வீடுகளில் தங்க நேரிடும் என்று முன்கூட்டியே தெரிந்தால் கூடவே ஒரு பாடப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்கள். அங்கு நேரத்தை வீணடிக்காமல் படிக்கலாம்.‌ அதுபோல நீண்ட பயணம் செய்ய நேரிடும்போதும் தேர்வுக்காகப் படிக்கலாம். பயணத்தின்போது படிப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.‌ அதுபோன்ற தருணங்களில் உங்கள் பெற்றோர் அருகில் இருந்தால் அவர்களைச் சத்தமாக வாசிக்கச் சொல்லி நீங்கள் கண்களை மூடி காதுகளை கூர் தீட்டிக் கேட்கலாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று உங்கள் நண்பர்கள் கேலி செய்யலாம். ஆனால், இருக்கக்கூடிய நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்துபவர்களே மிக அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். கிராமப்புறங்களில் மாணவர்கள் சிலர் ஆடு மாடு மேய்த்துக் கொண்டே ஒரு கையில் கம்பும் இன்னொரு கையில் புத்தகமுமாகப் படிக்கும் காட்சியைப் பார்த்ததுண்டா?

படித்த பாடங்களை மீண்டும் வாசித்துப் பார்ப்பது அவசியம். குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடத்திலும் 5 மாதிரி வினாக்களுக்குத் தேர்வு எழுதிப் பார்த்தால் அட்டகாசமான மதிப்பெண்களை அள்ள முடியும்.

கட்டாய கவனப் பகுதி:

முழு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் உங்கள் பாடப்புத்தகத்தில் ஆங்காங்கே “உங்களுக்குத் தெரியுமா?” என்று கட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை படித்துக் கொள்ளுங்கள்.‌ நூறு மதிப்பெண் பெறக் குறிவைக்கும் மாணவர்கள் சாய்ஸ் இல்லாத ஒரு மதிப்பெண் வினா விடைகளை ஒமிஷன் லிஸ்டில் சேர்க்காமல் முழுமையாகப் படிக்க வேண்டும். ரிலாக்ஸ் ப்ளீஸ்! - எப்போதும் புத்தகத்திலேயே மூழ்கிக் கிடக்காமல் உங்களை நீங்களே விருப்பப்படி ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.‌ ஊட்டச்சத்து பானம் குடிப்பது, மொட்டை மாடியில் நின்று நிலா பார்ப்பது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

அதே நேரம் ரிலாக்ஸ் என்ற பெயரில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை வேண்டாம். அலைபேசியை அடுத்த ஆறு மாதங்களுக்கு அணைத்து வைத்து விடுவது ஆகச் சிறந்த தயாரிப்புக்கு உதவி செய்யும். வாழ்த்துகள்!

- கட்டுரையாளர் கல்வியாளர்; தொடர்புக்கு: suriyadsk@gmail.com

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة