கடல்சார் பல்கலை. நடத்திய நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 28, 2024

Comments:0

கடல்சார் பல்கலை. நடத்திய நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு



கடல்சார் பல்கலை. நடத்திய நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சித்தார்த் என்ற மாணவர் சார்பில் அவரது தந்தை எம்.சதீஷ்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘இந்தியாவில் கடல்சார் கல்விக்காக 160 கல்வி நிலையங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 15 கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடல்சார்ந்த படிப்புகளில் சேர தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த ஏப்.21 அன்று வெளியான மெரைன் இன்ஜினீயரிங், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கான விளம்பரத்தில் முழு தகவல்கள் இல்லை. குறைந்தபட்சம் இந்த படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கூட அந்த விளம்பரத்தில் இடம்பெறவில்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, அடித்தட்டு மாணவர்களை புறக்கணிக்கும் நோக்கிலேயே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென கடந்த ஜூன் 8-ம் தேதி கம்ப்யூட்டர் வாயிலாக தனியார் மூலமாக நுழைவுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு அதிக பரிட்சயமற்ற ஒன்று. இந்த தேர்வில் 47 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், தோராயமாக 14 ஆயிரம் பேரின் தரவரிசைப் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 8 அன்று நடத்திய நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உரிய வழிமுறைகளை பின்பற்றி மறுதேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, “இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் நோக்கிலேயே இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews