முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து.. ஏன்? மத்திய அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 23, 2024

Comments:0

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து.. ஏன்? மத்திய அரசு விளக்கம்



இன்று நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் மருத்துவ படிப்புக்கு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தான் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது, 1,500க்கும் அதிகமானவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் சர்ச்சையை கிளப்பின. இதனால் நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இளங்நிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளை படிக்க இயலும்.

இந்நிலையில் தான் மொத்தமுள்ள 52 ஆயிரம் இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் முதுநிலை படிப்புக்கான தேர்வை 2 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் மேல்படிப்பு படிக்கும் நோக்கத்தில் அவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் நீட் முதுநிலை தேர்வுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மொத்தம் 259 நகரங்களில் இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொரட்பாக நேற்றைய தினம் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛நாளை (அதாவது இன்று)நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது, அதன்பிறகு யுஜிசி நெட் தேர்வுக்கான வினாத்தாள் டார்க்நெட்டில் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த 2 தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை நடத்தி வரும் நிலையில் நீட் இளநிலை மருத்துவ படிப்புக்கான தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ஆனால் யுஜிசி நெட் தேர்வு நடந்து முடிந்த நிலையில் வினாத்தாள் கசிந்த புகாரை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய தேர்வு முகமை நடத்தும் முதுநிலை நீட் தேர்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடு புகார்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் அதிரடியாக மாற்றப்பட்டார். சுபோத் குமார் சிங்கிற்கு பதிலாக தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐடிபிஓ எனும் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் தலைவராக உள்ள பிரதீப் சிங் கரோலாவுக்கு தேசிய தேர்வு முகமையின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - மாணவர்கள் கடும் அவதி!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு இன்று (ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று (சனிக்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இதனை தெரிவித்துள்ளது.

சில போட்டித் தேர்வுகளின் அறம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews