பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு வாய்ப்பு: அண்ணா பல்கலை. காஞ்சி வளாகத்தில் புதிய பிஇ படிப்பு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 01, 2024

Comments:0

பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு வாய்ப்பு: அண்ணா பல்கலை. காஞ்சி வளாகத்தில் புதிய பிஇ படிப்பு அறிமுகம்



பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு வாய்ப்பு: அண்ணா பல்கலை. காஞ்சி வளாகத்தில் புதிய பிஇ படிப்பு அறிமுகம்

பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் வளாகத்தில் இந்த ஆண்டு பிஇ (எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், உணவு, விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக காஞ்சிபுரம் வளாகத்தில் இந்த ஆண்டு பிஇ (எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய புதிய பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த 4 ஆண்டு கால படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் (எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, ஆட்டோமொபைல்) சேரலாம். இந்த ஆண்டு டிப்ளமா முடிப்பவர்கள் மட்டுமின்றி 2022, 2023-ம் ஆண்டு முடித்த மாணவர்களும் இதில் சேரத் தகுதியானவர்கள். டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். படிக்கும்போதே தொழில்பயிற்சியுடன் மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து, மருத்துவ காப்பீடு ஆகிய அனைத்து செலவுகளையும் எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய பிஇ பட்டப்படிப்பு குறித்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews