கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 14,900 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 19, 2024

Comments:0

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 14,900 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்



கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 14,900 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 14,900 மாணவ - மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 21-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், பிடெக் படிப்புகளில் 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், உயிரியலும் மற்றும் பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலும் படித்திருக்க வேண்டும். இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 12,700 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 2,200 பேரும் என மொத்தம் 14,900 மாணவ - மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, தவறு செய்திருந்தால், அதற்காக திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews