கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் விண்ணப்பம் Application in 3rd week of April for free admission in private schools in compulsory education programme
கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக தமிழக அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.370 கோடி வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் (2024-25) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்: இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.