பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் இல்லை - அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مارس 01، 2024

Comments:0

பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் இல்லை - அமைச்சர்



பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் இல்லை - அமைச்சர் No power cut till the end of general exams - Minister

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக் கூடாது என மின்வாரிய பொறியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்.தங்கம் தென்னரசு தலைமையில், எதிர்வரும் கோடை காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், வரக்கூடிய கோடைக் காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சார தேவை குறித்தும் அதனை எவ்வித சிரமமின்றி பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

மேற்கண்ட ஆய்வின் போது, அமைச்சர் தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு குறித்து கேட்டறிந்தார்.

மாநிலத்தின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத உச்ச பட்ச மின் தேவை முறையே 17,035 மெகா வாட் மற்றும் 17,690 மெகா வாட் எட்டிய நிலையில், இந்த உச்ச பட்ச மின் தேவையானது எவ்வித மின் தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மின் தேவையுடன் இதனை ஒப்பிடும் போது, முறையே இது சுமார் 11.1% மற்றும் 9% கூடுதலாகும். இதே போன்று, மார்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்ச பட்ச மின் தேவை முறையே 18,000 மெகாவாட் மற்றும் 19,900 மெகாவாட் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி மூலம் 13,999 மெகாவாட் மற்றும் 15,093 மெகாவாட் பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள மின் தேவையை மார்ச் மாதம் 3,571 மெகாவாட் மற்றும் ஏப்ரல் 4,321 மெகாவாட் மின்சாரத்தினை வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம், நம் மாநிலத்தின் கோடைக்கால மின் தேவையை முழுமையாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும். மேலும், கோடைக்காலத்தில், மின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மின் பராமரிப்பு பணிகளுக்கான 2,32,896 மின் கம்பங்கள், 17,918 மின் மாற்றிகள் மற்றும் 12,500 கி. மீ. மின் கம்பிகள் உள்ளிட்ட முக்கிய தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஆணைப்படி, நம் மாநிலத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மகாஜன், இ.ஆ.ப., இயக்குநர் (பகிர்மானம்) இரா.மணிவண்ணன் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة