SC, ST குறைவும் பணியிடங்களை கணக்கிட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு Tamil Nadu government orders to set up a committee to calculate SC and ST vacancies
அரசுத் துறைகளில் ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு:
அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சோ்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடா்பான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதன்படி, அரசுத் துறைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கை உறுதி செய்வதற்காக அரசுத் துறை உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவராக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா செயல்படுவாா். சட்டத் துறை இணைச் செயலா் ப.அன்புச் சோழன், மனிதவள மேலாண்மைத் துறை இணைச் செயலா் பி.ஆா்.கண்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். இந்தக் குழு குறைவுப் பணியிடங்களை துறைகள் வாரியாக ஆய்வு செய்து, பிப்.28-ஆம் தேதிக்குள் தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்கும்.
இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் பிப்.19 முதல் 27-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் மாலையில் நடைபெறும். நாளொன்றுக்கு 5 அரசுத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் அல்லது துறைத் தலைவா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்துக்கான பொருள், கூட்டம் நடைபெறும் தேதி ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.