ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வாபஸ் - பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் - AIFETO அறிக்கை 15.02.2024.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 15, 2024

Comments:0

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வாபஸ் - பொங்கும் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் - AIFETO அறிக்கை 15.02.2024..

AIFETO.. 15.02.2024..

தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:-36/2001.

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வாபஸ் என்று அறிவிக்கப்பட்டவுடன் தன்மானமுள்ள சிங்கங்கள்... போராளிகள்... புலனப்பதிவுகளின் வழியாக உங்களுடைய அடங்கா கோபத்தினை வெளியிட்டு வருகிறீர்கள்!..

வரலாற்று சிறப்புமிக்க ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தினை நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்கள்!.. இனமான ஆசிரியர் பெருமக்களே!.. இந்த சாக்கடை ஈக்களை நம்பி போராட்டத்தில் இறங்கி மூன்று முறை மூக்கறுபட்டது போதாதா?.. என்று எழுதி வருகிறீர்கள்!..

இன்னொரு கூட்டமைப்பு போராட்டத்தை திட்டமிட்டு நடத்துவதற்கு அறிவிப்பினை வெளியிட்ட பின்னர் எங்களை இயக்கப் பொறுப்புகளிலிருந்து விடுவித்திட அனுமதியுங்கள் என்று வேதனை உணர்வுடன் எழுதி வருகிறீர்கள்!.. வேதனை உணர்வு கொப்பளிக்கும் வகையில் பல பதிவுகளை புலனத்தில் எழுதி வருகிறீர்கள்!..

என்னைப் பொறுத்தவரையில் எதையும் எழுதி உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை!.. 76 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிற இந்த மாதத்தில் நான் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேனே?.. என்ற கவலை உணர்வுதான் எனக்கு மேலிடுகிறது. ஒவ்வொரு முறையும் களப்பணியாற்றி போராட்டத்திற்கு அடி எடுத்து வைக்கிற நேரத்தில் 'வாபஸ்' என்ற எதிரொலி கேட்டு இதயங்கள் எல்லாம் சுக்கு நூறாகி போகின்றன.. என்ற இதயக்குமுறல்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

எனக்கொரு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஒரு பதிவினை அனுப்பி இருந்தார்கள். ஜாக்டோ ஜியோ போராட்டம் கண்டிப்பாக இருக்காது!. வாபஸ் பெற்று விடுவார்கள் பாருங்கள்!! என்று எனக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனுப்பி இருந்தார்கள்.

போர்க்குணம் மிக்க சங்கங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற களங்கத்தினை யார் போக்குவது?. 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்னிடம் நடத்தப்போவதாக சொன்னார்கள். நான் அவர்களிடம் 15 ஆம் தேதி நடத்தும் ஆர்ப்பாட்டத்தினை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமாக அறிவித்திட அலைபேசியில் கேட்டுக்கொண்டோம். அவர்களும் ஆர்ப்பாட்டத்தினை அடையாள வேலைநிறுத்தப் போராட்டமாக மாற்றி அறிவித்தார்கள்.

ஆனால் ஜாக்டோ ஜியோ வாபஸ் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு களத்தில் நின்று திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்துவதாக அறிவித்து விட்டார்கள்!. அந்த அமைப்பின் தலைவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை கேட்கிற போது எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை!. நீங்களாவது எடுத்த முடிவில் பின் வாங்காமல் திட்டமிட்டபடி போராட்டத்தினை நடத்துங்கள்! என்று கேட்டுக் கொண்டோம்! அவர்களும் திட்டமிட்டபடி நடத்துவதாக அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டு, போராட்ட அறிவிப்பினையும் பதிவுகளாக தெரிவித்து வருகிறார்கள்!.

தமிழக ஆசிரியர் கூட்டணியைப் பொறுத்தவரையில் நம்முடைய எதிர்ப்பினை நமது பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.ஆசிரியர் இயக்கத்தின் மூத்த தலைவர் திரு.அ.மாயவன் Ex.MLC அவர்களும், மூத்தத் தலைவர் திரு ச.சங்கரப்பெருமாள் ஆகியோர் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆசிரியர் சங்கத் தலைவர்களும் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள்.! சங்கத் தலைவர்களுக்கு அரசியல் உணர்வு இருக்கலாம்.. ஆனால் சங்கங்களை அரசியல் கட்சிகளோடு இணைத்துக் கொண்டு நடத்துபவர்களை நம்பினால் யாராலும் காப்பாற்ற இயலாது. நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தில் நடைபெற்றது இதுதான்.

போராட்டம் இல்லாமல் எந்தக் கோரிக்கைகளையும் இதுவரையில் எந்த அரசிலும் வென்றெடுத்ததாக வரலாறு இல்லை!.. வரலாறு இல்லை!!.

என்பதை நாம் சுயபரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் ஜேக்டோ அமைப்பினை மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்றிணைத்து ஆசிரியர் சமுதாயத்தினை பாதுகாத்திடும் அமைப்பாக ஒன்று திரட்டி கொண்டு வருவோம்!

வரும் இருபதாம் தேதிக்குள் வியூகம் வகுத்து உங்களுடைய நம்பிக்கையை மீண்டும் பெறுகின்ற வகையில் திட்டமிட்டு செயல்படுவோம்!.

நாம் தமிழக ஆசிரியர் கூட்டணிக்காக மட்டும் எந்தப் புலனப் பதிவுகளையும் வெளியிடுவதில்லை. ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் இரத்தநாளங்களையும், முக பாவங்களையும் பார்த்துதான் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் புலனப் பதிவுகளை அனுப்பி வருகிறேன்.

இன்னும் ஒரு வார காலத்தில் தன்மானம் காத்திடும் உணர்வுள்ளவர்களை ஒன்றிணைத்து ஆசிரியர் சமுதாயத்தின் மானத்தை காத்திடுவோம்!.. அரசாணை 243 க்கு திருத்தம் நாம் கேட்கவில்லை!! முடிவுரை எழுதப்பட வேண்டும்!.. என்பதைதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திட்டமிட்டபடி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்திருந்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் 90% விழுக்காடு நாம் வெற்றியினை ஈட்டியிருக்க முடியும்!. நாம் தான் அவர்களுடைய நம்பிக்கை உணர்வுகளை அவ்வப்போது தூள்தூளாக்கி விடுகிறோமே!..

விஷ ஜந்துகள் இல்லாத டிட்டோஜாக், ஜாக்டோ ஆசிரியர் அமைப்புகளை இணைத்துக்கொண்டு நமது பயணத்தை தொடர்வோம்!.. வெற்றி பெறுவோம்!...

அவரவர்கள் இயக்கங்களுடைய மாநில செயற்குழுவினை கூட்டி இதயக் குமுறல்களுக்கு தீர்வு காணும் வழியினை காட்டுவோம்!! வாருங்கள்!!!

என்றும் உங்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்துள்ள சகோதரன்....

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews