வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. முதல்வருக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، سبتمبر 14، 2023

Comments:0

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. முதல்வருக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம்



வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. முதல்வருக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்களின் வெந்த மனதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலைப் பாய்ச்சுகிறார் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கலான சு. ஜெயராஜ ராஜேஸ்வரன், மு.செல்வக்குமார், பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

13/9/2023 அன்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி வெளியீடு எண் 1873ல் சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஆற்றிய உரையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியினையும் உறுதிமொழிகளையும் இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டுகிறோம். இன்னும் சொல்கிறேன் 100க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாக திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையானது தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களின் மனதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுகளில் 24 மாத அகவிலைப்படி முடக்கம், மூன்று ஆண்டுகளுக்கான ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முடக்கம், ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தி வைத்ததன் வாயிலாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழக அரசால் பிற திட்டங்களுக்காக செலவிடப்பட்டு உள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொணர விழைகிறோம்.

மேலும், தமிழக அரசில் பணிபுரியும் 6 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்: 309 நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், புதிய ஓய்வு திட்டத்தில் சேர்ந்துள்ள ரூபாய் 70 ஆயிரம் கோடி தமிழக அரசால் இன்று வரையும் தவறாக கையாளப்பட்டு வருவதால் புதிய ஓய்வு திட்டத்தில் இறந்த, ஓய்வு பெற்ற 30,000ற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் இன்றி ஆதரவற்ற நிலையில் ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வறுமையில் உள்ளனர். ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று வரை புதிய ஓய்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் புதிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்ய வாய்ப்புகள் இருந்தும் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் முடிவுற்ற நிலையிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது ஊழியர்களை ஏமாற்றும் செயலாகவே கருதுகிறோம்.

மேலும், புதிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்வதால் தமிழக அரசுக்கு 35,000 கோடி உபரி நிதி கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இனியும் காலம் தாழ்த்தாது தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 6 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தங்களை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة