துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் கல்வித் துறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 01, 2023

Comments:0

துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் கல்வித் துறை!



துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் கல்வித் துறை!

அரசுப் பள்ளிகளில் பயின்று, பிளஸ் 2 , 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு தேர்வெழுதிய மாணவர்கள், உயர் கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்க்கை பெறவும், பிற உயர் கல்வி வாய்ப்புகளை பெறவும், தகுந்த வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இதற்கான சேர்க்கை முகாம் இம்மாதம் 25 முதல் 28-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்டக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும் துணைத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்களை, சிறப்பு முகாம்களில் பங்கேற்கச் செய்வதுடன், அவர்களை உடனடியாக பள்ளித் தலைமையாசிரியர் அல்லது உதவித் தலைமையாசிரியர் அல்லது நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அழைத்து வந்து, ஐடிஐ, பாலிடெக்னிக் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

துணைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் இதற்கான முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களில் 20 மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்கில் சேர்க்கை பெற்றிருப்பதாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் 5 அரசு ஐடிஐக்கள், தலா ஒரு மகளிர் அரசு ஐடிஐ, அரசு பாலிடெக்னிக் உள்ளது. இவைகளில் எப்படியும் முதற்கட்டமாக 75 பேர் சேர்க்கை பெறுவர் என்று தெரிவித்த அவர், “பள்ளிக் கல்வியை முடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என இந்த மாணவர்கள் தடுமாற்றத்தில் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதன் விளைவாகத் தான் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-க்களில் இந்த மாணவர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம்.

இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணத்தில் டிப்ளமோ படிக்கும் வாய்ப்புள்ளது. அதே போன்று ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சேர்க்கை கட்டணமாக ரூ.200 மட்டுமே பெறுகிறது. இது தவிர மாணவர்களை ஊக்கப் படுத்த ரூ.1,600 உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

சைக்கிள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தையும் அரசே இலவசமாக வழங்குகிறது. இதுபோக மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.750 உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி உடனடி வேலை வாய்ப்பு தருவதாக பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

ஐ.டி.ஐ சேர வந்த மாணவர்களிடம் இது குறித்து பேசிய போது ஒரு மாணவர், “நான் திட்டக்குடியில் இருந்து வருகிறேன். இங்கு முகாமிட்டிருக்கும் ஐடிஐ நிறுவனம் சிதம்பரத்தில் உள்ளது. நான் திட்டக்குடியில் இருந்து சிதம்பரம் செல்ல இயலாது” என்றார். இது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் குறித்து சுபாஷினியிடம் கேட்டபோது, “உண்மை தான், இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம். உதாரணமாக சிதம்பரத்தில் உள்ள ஐடிஐக்கான தேர்வு என்றால், அதன் சுற்றுப்புற பள்ளிகளில் துணைத் தேர்வெழுதிய மாணவர்களை மட்டும் வரச் சொல்லியிருக்கிறோம். அதே போன்று, நெய்வேலி ஐடிஐ சேர்க்கை நடை பெறும் போது, அதன் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை வரச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட எந்த விதத்திலும் திறமையில் குறைவானவர்கள் இல்லை. அவர்களை சரியாக வழிநடத்தினால் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கி, குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்பை பெற முடியும். திட்டமிட்டு தெளிவான பாதையை அமைத்தால் சிறந்த சிறு, குறுந்தொழில் முனைவோராக முடியும். அதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews