தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 25، 2023

Comments:0

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அறிவித்தார். முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும் என்றும். பின்னர், படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார். அந்த வகையில் முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 பேர், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 பேர், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 பேர், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 பேர் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்துக்கு தற்போது ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த சமூகநலம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 16 லட்சம் மாணவர்கள் பயன்: இந்நிலையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டார். அப்போது மாணவர்களுடன் முதல்வர் உரையாடினார்.

கட்சி பேதமின்றி, அனைத்து கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة